தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வார இறுதியிலும் குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து படங்கள் வெளியாகும் நிலையில், ஒரு படம் தியேட்டர்களில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாகி விட்டது. உதாரணமாக லட்சுமி ராமகிருஷ்ணனின் ’ஹவுஸ் ஓனர்’ படத்தைச் சொல்லலாம்.
விமர்சகர்கள் ’ஹவுஸ் ஓனர்’ படத்தைப் பாராட்டினாலும், படத்திற்கு மிகக் குறைவான ஸ்கிரீன்களே கிடைத்தன. 70 சதவீதத்திற்கும் அதிகமான திரைகளை ’சிந்துபாத்’ ஆக்கிரமித்தது. ஜூன் 28-ஆம் தேதி, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களுடன், தர்ம பிரபு, நட்சத்திர ஜன்னலில், காதல் முன்னேற்ற கழகம் மற்றும் ஜீவி ஆகிய படங்களும் திரைக்கு வந்தன.
இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன், “ஆறு படங்களுக்கும் இது நல்லதல்ல. கொலைகாரன் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கக் காரணம் அது தனியாக ரிலீஸானதால் தான். அந்தப் படம் 370 ஸ்கிரீன்களில் வெளியானது. இப்படி மொத்தமாக ரிலீஸ் செய்யும் போட்டியைத் தவிர்க்க வேண்டும். கூடுமானவரை மொத்தமாக வருவதை தவிர்த்து, ஒன்றிரண்டு படங்களுடன் ரிலீஸ் செய்வது தான் நல்லது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விஜய் சேதுபதி நடித்த ’சிந்துபாத்’ படம் முந்தைய வாரம் திரைக்கு வந்திருக்க வேண்டியது, ஆனால் ஒத்திவைக்கப்பட்டது. விஷாலின் ‘அயோக்யா’, ஜீவாவின் ‘கீ’, விமலின் ‘களவாணி 2’, அதர்வாவின் ‘100’ ஆகியப் படங்களும் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன.
இந்த வருட துவக்கத்திலிருந்து ஜூலை முதல் வாரம் வரை கிட்டத்தட்ட 110 படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீஸாகியுள்ளன. இதில் ரஜினிகாந்தின் ’பேட்டா’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா 3’ ஆகிய மூன்று தான் பெரிய படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன.
வசூல் அறிக்கைகளின் படி, விஸ்வாசம் தமிழ்நாட்டில் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்தது, அதைத் தொடர்ந்து பேட்டா ரூ.120 கோடியை ஈட்டியது. ஆனால் ’பேட்ட’ உலகளவில் ’விஸ்வாசத்தை’ விட அதிகம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சனா 3 தமிழ்நாட்டில் ரூ .50 கோடிக்கு மேல் வசூலித்தது. ஈஸ்டர் வார இறுதியில் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் ரூ.100 கோடியைத் தொட்டது.
இது குறித்து பேசிய தியேட்டர் உரிமையாளர் ஒருவர், “கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகரங்களில் பேட்ட அதிக வசூல் செய்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் விஸ்வாசம் தான் அதிகம் வசூலித்தது. ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி, அருண் விஜய்யின் ’தடம்’ மற்றும் சந்தானத்தின் தில்லு துட்டு 2 ஆகியவை பெரும் லாபம் ஈட்டின. குறிப்பாக இயக்குநர் மகிழ் திருமேனியின் ’தடம்’ தமிழகத்தில் 20 கோடிக்கும் மேல் வசூலித்தது. பெரிய நட்சத்திரங்களால் பெரிய ஓபனிங்கிற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் அந்த படம் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறதா என்பதை ’கண்டெண்ட்’ மட்டுமே தீர்மானிக்கிறது” என்றார்.
”முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 80 – 90 படங்கள் தான் வெளியாகும் ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. குறைவாக படங்கள் ரிலீஸாகும் போது மக்கள் பெரும்பாலும் திரையரங்குகளுக்கு சென்று அதைப் பார்ப்பார்கள். அதிகப் படங்கள் வரும் போது ‘இது இல்லையென்றால் மற்றொன்று’ என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அதனால் மொத்தமாக படங்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டும்” என்றார் தயாரிப்பாளர் ஒருவர்.
இப்போதைக்கு, அஜித்தின் ’நேர் கொண்ட பார்வை, மற்றும் சூர்யாவின் ’காப்பன்’ ஆகிய இரண்டு படங்களும் ஆகஸ்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் ’பிகில்’ வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இந்தப் பெரிய படங்களை கருத்தில் கொண்டால், இந்தாண்டின் இரண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
2019: How Tamil films have fared so far