ஜீவா - ஸ்ரேயா சரண் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான படம் 'ரௌத்திரம்'. பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் ஜீவா அட்டகாசமாக நடித்திருந்தார். ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக உருட்டல், மிரட்டல் நிறைந்த அமைதியான கேரக்டரில் கலக்கியிருப்பார் ஜீவா. ஆனால், வணிக ரீதியாக இப்படம் அந்தளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
இதற்கு பின், இரண்டு வருடங்கள் கழித்து கோகுல் இயக்கிய படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இப்படத்தின் தலைப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி படமாக இது எடுக்கப்பட்டது.
விஜய் சேதுபதி கேரியரிலேயே முக்கியமான படமாக இது அமைந்தது. இப்படத்திற்கான அவரது ஸ்லாங் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 'எனது சினிமா வாழ்க்கையில், இதுபோன்ற ஒரு படம் இனி அமையாது' என விஜய் சேதுபதியே தெரிவித்து இருந்தார்.
அந்த அளவிற்கு வழக்கமான காமெடிப் படங்களில் இருந்து அந்நியப்பட்டு, புதுவிதமான காமெடி பாதையில் இப்படம் இருந்தது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருமுறை பேட்டியளித்த இயக்குனர் கோகுல், "ரௌத்திரம் படத்தைப் பார்த்தபின் என்னால் காமெடி படங்களை இயக்க முடியாது என சிலர் சவால் விட்டனர். அவர்களுக்காகவே இந்த ஸ்க்ரிப்டை எழுதி, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்ற தலைப்பை வைத்தேன். இப்போது அவர்களுக்கு என்னால் இதுபோன்ற படங்களையும் இயக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்" என்றார்.
இப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி இப்படம் ரிலீசானது. இதையடுத்து, #4yearsofIABK என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இதனை இயக்குனர் கோகுல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் 'ஜங்கா' என்ற படத்தின் மூலம் கைக்கோர்த்து இருக்கும் கோகுல், அப்படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவுடன் ஃபிரான்ஸ் சென்றுள்ளார். இன்று இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, விஜய் சேதுபதியுடன் ஃபிரான்சில் எடுத்துக் கொண்ட செல்பியை கோகுல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.