2017, 2018 காலாண்டு படங்கள் ஓர் ஒப்பீடு

காலாண்டு நஷ்ட - லாப கணக்குகள் பார்க்கப்படும். இந்த வருடம் எந்த பரபரப்பும் இல்லை. தலைக்கு மேல் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன?

பாபு

மார்ச் மாதம் முடிந்ததும், தமிழ் சினிமாவின் முதல் காலாண்டு படங்களின் நிலவரம் குறித்து பரபரப்பாக கட்டுரைகள் தீட்டுவார்கள். காலாண்டு நஷ்ட – லாப கணக்குகள் பார்க்கப்படும். இந்த வருடம் எந்த பரபரப்பும் இல்லை. தலைக்கு மேல் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன? மார்ச் 1 முதல் நடந்துவரும் வேலைநிறுத்தம் உற்சாகத்தை உறிஞ்சிவிட்டது.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருகிறது. 2017 ஆரம்பத்தில், ‘பரவாயில்லை, இந்தமுறை படங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவு’ என்று களித்திருந்தார்கள். வருடக் கடைசியில் உற்பத்திப் பெருகி முந்தைய கணக்கை எட்டியது.

2015 இல் முதல் காலாண்டில் வெளியான தமிழ்ப் படங்கள் 60. 2016 இல் சற்றுக் குறைந்தது, 52 படங்கள். 2017 இல் அதைவிட குறைந்தது, 44 படங்கள். இந்த வருடம் – அதாவது 2018 இல் மார்ச் இறுதிவரை வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 35.

2017 ஜனவரியில் எட்டு படங்கள் மட்டுமே வெளியாயின. விஜய்யின் பைரவா, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, கலையரசன் நடித்த அதேகண்கள் அவற்றில் முக்கியமானவை. பைரவா மிகச்சுமாராகப் போனது. அதேகண்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக தோல்வி. பார்த்திபன் படத்தை டிசார்டர் எனலாம்.

2018 ஜனவரியில் 13 படங்கள் வெளியாயின. பொங்கலை முன்னிட்டு வெளியான குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் மூன்றில் தானா சேர்ந்த கூட்டம் பரவாயில்லை ரகம். பரவாயில்லைதான். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசளித்ததற்கு விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது. நஷ்ட படம் எடுத்தவருக்கு கார் பரிசா என்று வெளிப்படையாகவே கேட்டனர். மற்ற இருபடங்கள் தோல்வி பட்டியலில் இடம்பிடித்தன.

ஜனவரியில் வெளியான பிற முக்கியமான படங்கள் விமலின் மன்னர் வகையறா, உதயநிதியின் நிமிர். மன்னர் வகையறா படத்தை விமலே தயாரித்தார். படம் பல கோடிகளை அவருக்கு நஷ்டப்படுத்தியது. நிமிர் மலையாளத்தில் சென்சேஷனல் ஹிட்டாக அமைந்த மகேஷின்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக். ப்ரியதர்ஷன் இயக்கினார். ஆனால், படம் தமிழில் போகவில்லை. அதேநேரம், தெலுங்கு டப்பிங் பாக்மதி தமிழில் நல்ல வசூலைப் பெற்றது. சென்னையில் மட்டும் 4 கோடிகளைக் கடந்து படம் வசூலித்தது.

வியாபாரரீதியில் 2017 ஜனவரிக்கும், 2018 ஜனவரிக்கும் பெரிய வித்தியாசமில்லை. முழுமையான வெற்றி என்று ஒரு படத்தைக்கூட கூற முடியாது. டப்பிங் படம் பாக்மதி மட்டும் விதிவிலக்கு (இந்தப் படத்தை தானா சேர்ந்த கூட்டத்தை தயாரித்த ஞானவேல்ராஜா வெளியிட்டார். தனது தானா சேர்ந்த கூட்டத்தின் தெலுங்கு டப்பிங்கை பாக்மதி தயாரிப்பாளருக்கு தந்து, பாக்மதியின் தமிழ் டப்பிங்கை பெற்றுக் கொண்டார். ஒருவகை பண்டமாற்று)

2017 பிப்ரவரியில் 11 படங்கள் வெளியாயின. அதில் போகன் நல்ல ஓபனிங்கை பெற்று நாலாவது நாளே வசூலில் விழுந்தது. படம் தோல்வி. ரஜினிக்கு அடுத்து அதிக வியாபாரம் சூர்யாவுக்குதான், 200 கோடியை அவரது படம் வசூலிக்கும் என்று ஞானவேல்ராஜா பில்டப் தந்து சி3 படத்தை வெளியிட்டார். படம் சுமாராகவே போனது. பலரும் நஷ்டம் என்று முணுமுணுத்தனர். 11 படங்களில் இந்த இரண்டை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடியும். மற்ற அனைத்தும் தோல்வி.

2018 பிப்ரவரியில் 21 படங்கள் வெளியாயின. சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகம். விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனின் மதுரவீரன், விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், விஜய் யேசுதாஸ் நடித்த படைவீரன், வி.இசட்.துரையின் ஏமாலி, சுந்தர் சி.யின் கலகலப்பு 2, மிஷ்கினின் சவரக்கத்தி, பாலாவின் நாச்சியார், அர்ஜுன் இயக்கி நடித்த சொல்லிவிடவா, ஆறு இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய 6 அத்தியாயம், முன்னணி நட்சத்திரங்கள் நடித்த கேணி என அதிகமும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள். அவற்றில் கலகலப்பு 2, நாச்சியார் மட்டுமே பிழைத்தன. மார்ச் 1 முதல் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் இவ்விரு படங்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. இப்போதும் பல திரையரங்குகளில் இவ்விரு படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. வேலைநிறுத்தத்தால் லாபமடைந்த இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் இவை மட்டுமே. உண்மையில் இப்படங்கள் வசூலித்திருக்க வேண்டியதைவிட 40 சதவீதம் அதிகம் வேலைநிறுத்தத்தால் வசூலித்துள்ளன. 2017 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 2018 பிப்ரவரி வெற்றியின் மாதமே.

2017 மார்ச்சில் 24 படங்கள் வெளியாயின. அதில் குற்றம் 23, கவண் ஆகியவை நஷ்டத்திலிருந்து தப்பின. சிலருக்கு லாபமும் கிடைத்தது. எங்கிட்ட மோதாதே, பாம்பு சட்டை, கடுகு என சில படங்கள் பரவாயில்லை என்று விமர்சிக்கப்பட்டன. ஆனால் வசூலில் தோல்வியடைந்தன.

2018 மார்ச் முதல் தேதியிலிருந்து புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகாது என்று தயாரிப்பளர்கள் சங்கம் அறிவித்தது. அதனை மீறி மார்ச் 2 பவித்திரன் தனது தாராவி படத்தை வெளியிட்டார். படம் அட்டர் பிளாப். அந்தப் படத்தைத் தவிர வேறு நேரடி தமிழ்ப் படம் எதுவும் வெளியாகவில்லை. கணக்குபடி தமிழ் திரைத்துறைக்கு இது பெரும் நஷ்டம். ஆனால், அவர்கள் முன்னெடுத்திருக்கும் கோரிக்கைகள், எதிர்பார்க்கும் சீர்த்திருத்தங்களுடன் ஒப்பிட்டால் ஒதுவொரு சின்ன தேக்கம் மட்டுமே. நாளைய ஒளிமயமான வாழ்வுக்கான சின்ன காத்திருப்பு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close