இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரையரங்குகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில் திடீரென்று ரிலீஸிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் நெருக்கடி.

பாபு

தமிழ் சினிமா நடத்திய வேலை நிறுத்தத்துக்குப் பிறகு சென்னை பாக்ஸ் ஆபிஸில் தமிழ்ப்படங்களின் ஆதிக்கம் குறைவாகவே இருந்தது. இந்த வாரம்தான் பழைய அடியிலிருந்து தமிழ் சினிமா மீண்டிருக்கிறது.

சென்ற வாரம் நடிகையர் திலகம், இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் வெளியாயின. பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரையரங்குகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில் திடீரென்று ரிலீஸிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் நெருக்கடி.

விஷாலின் இரும்புத்திரை படத்தை அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தது. சைபர் க்ரைம் குற்றங்கள் பின்னணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அம்சங்களுடன் படம் இருந்ததால் நல்ல வரவேற்பு, நல்ல விமர்சனம். இந்தப் படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் சுமார் 200 காட்சிகளுக்கும் அதிகமாக திரையிடப்பட்டது. முதல் மூன்று தினங்களில் 1.27 கோடியை படம் வசூலித்துள்ளது. விஷால் படத்துக்கு இது நல்ல ஓபனிங் என்றே சொல்ல வேண்டும். படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வார நாள்களிலும் படம் நல்ல வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்குப் படம் மகாநதி சென்ற வாரம் புதன்கிழமை வெளியானது. சென்னையில் அப்படத்தின் வார இறுதி வசூல் சுமார் 59 லட்சங்கள். மகாநதி தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை வெளியானது. நேர்மறை விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.

மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. த்ரில்லர்வகை. இதுபோன்ற படங்களுக்கான பார்வையாளர்கள் ஒருசாரர் மட்டுமே. அதனால் மாஸ் ஓபனிங் கிடைப்பது அரிது. படமும் சிறந்த விமர்சனங்களை பெறவில்லை. எனினும் முதல் மூன்று தின ஓபனிங்கில் சென்னையில் சுமாராக 58.50 லட்சங்களை வசூலித்துள்ளது. நல்ல ஓபனிங். அதேநேரம், இந்த வசூலை வார நாள்களில் படம் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறி.

மே 4 வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து சென்ற வார நாள்களில் சுமார் 1.08 கோடியை வசூலித்துள்ளது. வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறில் சுமார் 55 லட்சங்களை தனதாக்கியுள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 3 கோடிகள். இந்தப் படத்துக்கு இது அதிகபட்சமான வசூல்.

ஏ.எல்.விஜய்யின் தியா நேற்றுவரை சென்னையில் 95 லட்சங்களை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா நேற்றுவரை சென்னையில் 92.50 லட்சங்களை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுன் படங்களில் இதுவே அதிகபட்ச சென்னை வசூல்.

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் திரைப்படம் நேற்றுவரை சென்னையில் 6.45 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2016 இல் தி ஜங்கிள் புக் திரைப்படம் சென்னையில் மூன்றரை கோடிகள் வசூலித்ததே ஹாலிவுட் படத்தின் அதிகபட்ச சென்னை வசூலாக இருந்தது. அதனை இந்தப் படம் முறியடித்துள்ளது. இன்னும் 55 லட்சங்களை வசூலித்தால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் சென்னை வசூலை எட்டிவிடும்.

சென்ற வாரம் வெளியான மூன்று படங்களில் இரும்புத்திரை முதலிடத்திலும், நடிகையர் திலகம் இரண்டாவது இடத்திலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதில் முதலிரண்டு படங்கள் நிச்சய வெற்றி என்பது தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் கிடைத்திருக்கும் நற்செய்தி.

×Close
×Close