தமிழின் முதல் பிக்பாஸ் எடிஷனில் ஆரவ் டைட்டில் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் இன்றோடு முடிவடைந்தது. நூறாவது நாளான இன்று, யார் பட்டம் வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகமாக இருந்தது. சினேகன், ஆரவ், கணேஷ், ஹரீஷ் ஆகிய நான்கு பேரும் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர்.
நேற்று (சனி ) இரவு 8:30 மணிக்கு ஆரம்பித்த ஷோ, இன்று(ஞாயிறு) நள்ளிரவு 12:37 மணிக்கு தான் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இந்த இறுதி நாள் ஷோவில் கலந்து கொண்டனர். நமீதா மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
அதேபோல், இறுதி போட்டியாளர்கள் நான்கு பேரின் குடும்பத்தினரும் இந்த ஷோவிற்கு வந்திருந்தனர். இப்போது சொல்வார்களா, இப்பயவாது சொல்வார்களா என நம்மை சோதித்து இறுதியாக, மூன்றாவது இடத்தைப் பிடித்தவர்களில் இருந்து பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் மூன்றாவது இடத்தை கணேஷ் வெங்கட்ராமன் பிடித்தார். இது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில், பலரும் அவர் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தை ஹரீஷ் கைப்பற்றினார். இறுதியாக, ஆரவ் மற்றும் சினேகன் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை பலத்த சஸ்பென்சிற்கு இடையே, கமல்ஹாசன் அறிவித்தார்.
ஒருவழியாக, ஆரவ் தான் வெற்றியாளர் என்பதை கமல் அறிவிக்க, அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும், விசில்களும் பறந்தன. ஆனால், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, கண்ணீர் சிந்தாமல், மிகவும் கேஷுவலாக டைட்டில்வின்னர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் ஆரவ்.
அவருக்கு கொடுத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம். மற்ற போட்டியாளர்களுக்கு, விவோ செல்ஃபோன்கள் பரிசாக வழங்கப்பட்டது. நூறு நாட்களாக மக்களை கட்டிப் போட்டு வைத்திருந்த பிக்பாஸ் ஷோ இன்றோடு இனிதே நிறைவு பெற்றது.