'சுச்சிலீக்ஸ்' வீடியோ விவகாரம்: பாதியில் கோபமாக வெளியேறிய தனுஷ்!

மனவேதனையில் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, “நான் மன வேதனையில் இருந்ததாக யார் சொன்னது?” என தனுஷ் கோபத்துடன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாடகி சுச்சித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து, சில நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகின. இதில் தனுஷ் தொடர்பான சில விஷயங்களும் வெளியாகின. இதனால் அப்போது பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், தனுஷ் இவ்விவகாரம் குறித்து, பொதுவெளியில் இதுவரை எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால் நடித்திருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்தின் புரோமோ பணிகளில் தனுஷ் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

விஐபி-யின் முதல் பாகம் தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ எனும் பெயரில் வெளியாகி ஹிட் ஆகியிருந்தது. இதனால், இரண்டாம் பாகத்தையும் தெலுங்கில் ரிலீஸ் செய்வதில் தனுஷ் அதிக ஈடுபாட்டோடு உள்ளார். அதன் ஒருபகுதியாக, தெலுங்கு புரோமோவுக்காக ஆந்திரா சென்றிருந்தார் தனுஷ்.

அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில், தனுஷ் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளர் கேட்ட கேள்விகள் தனுஷை மிகவும் ஆத்திரம் அடையும் வகையில் இருந்தது.

குறிப்பாக, சுச்சிலீக்ஸ் விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்விகள் எழுப்பியதும் தனுஷ் கோபப்படத் தொடங்கினார். அவ்விவகாரம் பேசுபொருளாகிய போது மனவேதனையில் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, “நான் மன வேதனையில் இருந்ததாக யார் சொன்னது?” என கோபத்துடன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘குற்றச்சாட்டுகள்’, ‘வீடியோக்கள்’ உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ந்து தொகுப்பாளர் கேள்விகளை எழுப்பியதால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற தனுஷ், ‘உங்களின் குடும்ப வாழ்க்கை சிக்கலில் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, “இது முட்டாள்தனமான நேர்காணல் நிகழ்ச்சி!” என்றுக் கூறியவாறு சட்டையில் பொருத்தப்பட்டிருந்த காலர் மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது போன்று, அந்த தொலைக்காட்சி புரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, சிறுதி நேரம் கழித்து தனுஷ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

சுச்சிலீக்சின் ட்விட்டரில் பக்கத்தில், அமலாபால், சஞ்சிதா ஷெட்டி, அனுயா ஆகியோரது அந்தரங்க படங்களும், வீடியோக்களும்  வெளியாகிருந்தன. இதனை அந்த நடிகைகள் மறுத்திருந்தனர்.  மேலும் சில முன்னணி இயக்குனர்கள் குறித்தும் வீடியோக்கள் வெளியிடப்படும் என அந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இவையனைத்தையும் தான் வெளியிடவில்லை என்றும், யாரோ எனது ட்விட்டரை ஹேக் செய்துவிட்டனர் என்றும் சுச்சித்ரா காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close