‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘மாரி’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காளி வெங்கட். கோவில்பட்டியைச் சேர்ந்த இவர், 2008ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ படத்தில் ரித்திகா சிங்கின் தந்தையாக நடித்து பெயர்பெற்றவர், சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.
காளி வெங்கட்டிற்கும், சென்னை கேகே நகரைச் சேர்ந்த முத்துசாமி - சாந்தி தம்பதியினரின் மகள் ஜனனிக்கும், சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இது, பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் ஆகும்.
கோயிலில் திருமணம் நடைபெற்றதால், இந்து திருமண சட்டப்படி அங்கேயே திருமணப் பதிவும் நடைபெற்றது. இருவீட்டையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
‘96’, ‘காத்தாடி’, ‘ஓணான்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் காளி வெங்கட்.