’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்புவிடம் “சைவ உணவு சாப்பிட்டும் கோபம் ஏன்?” என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியது, உணவிற்கும் குணத்திற்கும் தொடர்புள்ளதா என்ற கேள்வியை விதைத்துள்ளது. பகுத்தறிவாளர், பெரியாரியவாதி என கூறிக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் உணவை குணத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சமீப நாட்களாக எழுப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலியை மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்துதல், நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதுபோன்ற நிகழ்வுகள், நடிகர்கள் கஞ்சா கருப்பு, பரணி இடையேயான வாக்குவாதம் என பார்வையாளர்களை எப்போதும் பரபரப்பாகவே ’பிக் பாஸ்’ வைத்துக் கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியுடன் ஒன்ற முடியாமல் ஸ்ரீயும், மக்களால் வாக்களிக்கப்பட்டு அனுயாவும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு, பரணியுடன் மோதல்போக்கை கடைபிடித்து வருவதுபோன்று சில நாட்களாக ஒளிபரப்பப்பட்டது. பரணியை கஞ்சா கருப்பு தரக்குறைவாக திட்டுதல், பரணியை தாக்க முற்படுவது போன்ற சம்பவங்களும் ‘பிக் பாஸ்’ வீட்டில் அரங்கேறின.
இதையடுத்து, கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளர்களாக கஞ்சா கருப்பு, பரணி, ஓவியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மூவரில் வெளியேற்றப்பட வேண்டியவரை நடிகர் கமல்ஹாசன் ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். அதன்படி, கஞ்சா கருப்பு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
வெளியேறிய பின்பு, கஞ்சா கருப்புவிடம் பேசிய கமல்ஹாசன், “சைவ உணவுகள் தானே சாப்பிட்டதாக சொன்னீர்கள்? அப்புறம் ஏன் இவ்வளவு கோபம்?”, என கேட்டார். இது சர்ச்சையாகியுள்ளது.
கம்லஹாசனின் இந்த கேள்வி, அசைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகம் கோபப்படுவார்கள் எனவும், அவர்களே வன்முறையில் அதிகளவில் ஈடுபடுவார்கள் என்பதை குறிப்பிடும் வகையிலும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், சைவ உணவு சாப்பிடுபவர்கள் மென்மையானவர்கள் எனவும், அவர்கள் எந்தவொரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டார்கள் எனவும் கமல்ஹாசனின் கேள்வி பொருள்படுகிறது.
அசைவம் சாப்பிடுபவர்கள் குறிப்பாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அண்மைக் காலங்களில் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது அவை குறித்து பேசினாலோ தாம் தாக்கப்பட்டு விடுவோமோ என மக்கள் அஞ்சும் நிலையில், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எதிராக பொருள்படக்கூடிய கருத்தை கமல்ஹாசன் கூறியதற்கு சமூக ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசியல் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்பன போன்று ஆரோக்கியமான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசைவ உணவு சாப்பிடுபவர்களை தாக்கும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.