கவிஞர் சினேகன் கட்ட இருக்கும் மக்கள் நூலகத்திற்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் 10 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
கவிஞர் சினேகன் என்று சொல்வதைவிட, ‘பிக் பாஸ்’ சினேகன் என்று சொன்னால்தான் நிறைய பேருக்குத் தெரியும். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அங்கு இருந்தார். ஆனால், மயிரிழையில் வெற்றியைத் தவறவிட, நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘ஒருவேளை நான் வெற்றி பெற்றால், பரிசுத்தொகையான 50 லட்ச ரூபாயைக் கொண்டு என் ஊரில் நூலகம் கட்டுவேன்’ என நிகழ்ச்சியில் அடிக்கடி கூறிவந்தார் சினேகன். ஆனால், அவருடைய கனவு பலிக்கவில்லை. இருந்தாலும், அந்தக் கனவை நினைவாக்குவதற்கான முயற்சிக்கு வித்திட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சினேகன் கட்ட இருக்கும் ‘மக்கள் நூலகம்’, அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியில் அமைய இருக்கிறது. இதற்காக, 10 லட்ச ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், சினேகனின் ரசிகர்களும் நிதியுதவி அளித்து வருவதாக சினேகன் தெரிவித்துள்ளார்.
இந்த நூலகத்தில் வைக்கப்பட இருக்கும் புத்தகங்கள், இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட பல்வேறு உயர்பதவி வகிப்பவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இந்த நூலகத்திற்கு உதவ முன்வந்துள்ளன. அத்துடன், பல்வேறு பதிப்பகத்தார்களும் தங்களுடைய நூல்களை இலவசமாகத் தர முன்வந்துள்ளனர்.
இந்த நூலகம் தொடங்கப்படும்போது, ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட மிகப்பெரிய நூலகமாகத் தொடங்கப்படும். ஐ.ஏ.எஸ். முதற்கொண்டு டி.என்.பி.எஸ்.சி. பணிகளுக்கான இலவச பயிற்சி வளாகமும் இந்த நூலகத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் அதன்மூலம் தங்கள் கல்வி அறிவைப் பெருக்கிக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
செவித்திறன் குறைந்தவர்களுக்குப் பார்வை மூலம் கல்வியும், பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு செவித்திறன் மூலம் கல்வியும் வழங்கப்படும். மேலும், மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுக் கலைகளும் பயிற்றுவிக்கப்படும். தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மக்கள் நூலகத்தில் இடம்பெற உள்ளன.