தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான ராஜ்கிரன் மகள் கமெடி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராஜ்கிரன். 1989-ம் ஆண்டு வெளியான என்ன பெத்த ராசா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், தலைமுறை, நந்தா, சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நாயகன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வந்த ராஜ்கிரன், 3 முறை தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் படத்தில் அவரது மாமாவாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில் ராஜ்கிரனின் மகள், ஜீனத் பிரியா காமெடி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்தரையில் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் காமெடி நடிகரான அறிமுகமானவர் முனீஸ் ராஜா. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜனின் தம்பியான இவர் தொடர்ந்து முல்லும் மலரும் தொடரில் நடித்தார்.

அடுத்து தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த முனீஸ் ராஜா, ராஜ்கிரன் மகன் ஜீனத் பிரியாவுடன் பேஸ்புக்கில் அறிமுகமானி நண்பர்களாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்திலும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முனீஸ் ராஜா ஜீனத் பிரியா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத்திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்போது முனீஸ் ராஜா குடும்பத்தில் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ராஜ்கிரன் குடும்பத்தினர் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இந்த சம்பவம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil