‘ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பே அதைப்பற்றி விமர்சிப்பது சரியான செயல் அல்ல’ என சந்தானம் தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சந்தானத்திடம், ‘எந்த ஹீரோயினுடன் நடிக்க ஆசை?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள சந்தானம், “நம்ம செல்லக்குட்டி தீபிகா படுகோனே தான். அவங்க ஜோடியா ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், இப்போ அவங்க தலைக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகப் பயமுறுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ‘தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு உங்க ஆதரவு இருக்கா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. “நல்லா மாட்டி விடுறீங்களே… ராஜஸ்தானில் இருந்து நேரா வந்து என் வீட்டில் இறங்கிடப் போறாங்க. ஆனாலும், என் மனதில் பட்டதை சொல்கிறேன். எந்தப் படமாக இருந்தாலும் திரைக்கு வருவதற்கு முன்பு விமர்சிப்பதோ, நடிகர்களை மிரட்டுவதோ சரியான செயல் அல்ல” என்று பதில் கூறியுள்ளார் சந்தானம்.
சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’, டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். வைபவி ஷாண்டில்யா, சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக், இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். முதன்முறையாக இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் சிம்பு.