ரங்கராஜ் சுப்பையா என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் சத்யராஜ் இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு, அவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ், தனது தந்தையின் குழந்தை வயது படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சினிமா ஆசை காரணமாக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, சொந்த ஊரான கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்த சத்யராஜ், இன்று இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகன், அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல், வில்லாதி வில்லன், நூறாவது நாள், அலைகள் ஓய்வதில்லை, பாகுபலி போன்ற பல படங்கள் இவரது சினிமா கிரீடங்களில் பொறிக்கப்பட்ட வைரங்களாக காலத்திற்கும் ஜொலிக்கும். வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம், காமெடி என எந்த ரோல் தந்தாலும், அதை உடுத்திக் கொள்வது இவரது வாடிக்கை. இதனால் தான் இந்த 62 வயதிலும், சினிமாத் துறையில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாத் துறையில் கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோர் இவரது நண்பர்கள் என்று அவரே பலமுறை தெரிவித்துள்ளார். அதிலும் கவுண்டமணியும், இவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்துவிட்டால், சக நடிகர்களின் பாடு திண்டாட்டம் தான்.
தனக்கென்று தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர் சத்யராஜ். இதனால் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற கடும் ஆளுமைகளுக்கு இடையே தனது படங்களையும் வெற்றிகரமாக ஓட வைத்தார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் வரை ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கிய சத்யராஜை, ராஜமவுளி இயக்கிய பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது.
பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் 'கட்டப்பா' எனும் ரோலில் கலக்கிய சத்யராஜ், தற்போது நாடு முழுவதும் பிரபலம். வட இந்தியாவில் இவரை 'கட்டப்பா' என்று தான் அழைக்கின்றனர். அந்தளவிற்கு தனது நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்ட சத்யராஜின் 62-வது பிறந்தநாளான இன்று நாமும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
பிறந்தநாளை முன்னிட்டு, சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி, தனது தந்தையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக தளங்களில் அந்த க்யூட் பேபி சத்யராஜின் படம் வைரலாகி வருகிறது.