திராவிட ஜீவா, கட்டுரையாளர்
ஏழிசைவேந்தர் எம்.கே.டி, நவரசநாயகன், சகலகலாவல்லவன் பி.யு.சின்னப்பா, மக்கள்திலகம், புரட்சி நடிகர் எம்ஜிஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன், மெகா ஸ்டார் மம்முட்டி, சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவி, பிக் பி அமிதாப் காதல் இளவரசன் கமல்ஹாசன் இதெல்லாம் அந்தந்த காலகட்டங்களில் அவரவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட உச்ச நடிகர்களின் பட்டப்பெயர்கள் அதற்கடுத்து வந்த தலைமுறைகள் யாரும் மேற்கண்ட பட்டப் பெயர்களை தொடர விரும்பாமல் தங்களுக்கென தனி பெயரை சூட்டிக்கொள்வதில்தான் ஆர்வம்கொண்டிருந்தனர்.
மேற்கண்ட பெயர்களெல்லாம் ரசிகர்களின் அன்பால் ஆர்வமிகுதியால் சில நண்பர்களால், தலைவர்களால் பெயர் சூட்டப்பட்டு போற்றப்பட்டனர். அந்தந்த நடிகர்களுக்கும் அந்தப் பெயர்கள் சற்றேறக்குறைய பொருந்தித்தான் போனது. கமல்ஹாசனை தவிர, மேற்கண்ட நடிகர்கள் அனைவருமே தங்களது சக போட்டியாளர்களிடத்தில் மட்டுமல்ல, தங்களது திரைப்படத்தின் வெற்றி தோல்விகளையும் சரிசமமாகவே பங்கிட்டுக் கொண்டனர். தொடர்ந்து யாராலும் நம்பர் ஒன் என்கிற அந்தஸ்திற்க்குள் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை என்பதே திரைவரலாறு நமக்கு அளித்திருக்கும் சாட்சி. ஆனால், எழுபதுகளின் இறுதியில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், மட்டுமல்ல ரசிகர்களாலும் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு இன்றளவும் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
மேற்கண்ட ஜாம்பவான் நடிகர்களில் இருந்து ரஜினி எப்படி வேறுபட்டார் அவர் ஏன்?சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பிரதான காரணமாக இருப்பது அவரின் தொடர் வெற்றி மட்டுமல்ல, எவராலும் தொட முடியாத வெற்றியை கொடுத்ததால்தான், இயக்குனர் பாலா அவர்கள் கூட ஒருமுறை சொல்லியிருந்தார் இயக்குனர் மனோபாலாவும் அதை வழிமொழிந்தார். உலக அளவில் 90 சதவிகித வெற்றிப்படத்தை கொடுத்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்று, ஆம் அது உண்மையும் கூட… அதனால்தான் அந்த சூப்பர்ஸ்டார் என்ற பட்டப்பெயர் பதவியாகவே அவரிடம் ஒட்டிக்கொண்டது.
தேர்தலிலே வென்று முதல்வராவதைபோல தொடர்ந்து வென்று மூன்று தலைமுறைகளை தாண்டி சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார். ஒவ்வொரு ஜாம்பவான் நடிகர்களுக்கும் அவர்களின் உச்சகட்ட காலம் என்பது 10 முதல் 15 வருடங்கள் மட்டுமே அந்த பத்து பதினைந்து வருடங்களும் அவர்களால் தொடர்ந்து உச்சநிலையில் நம்பர்ஒன் அந்தஸ்த்தில் இருக்க முடியாது. இதிலும் ரஜினி விதிவிலக்குதான். 1978ல் ப்ரியா,முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரையில் ஆரம்பித்த அதிரடி பில்லா, முரட்டுக்காளையில் தொடர்ந்து தளபதி, சிவாஜி, கபாலி, 2.0 என்று தனது வசூல் புரட்சியை தொடர்வது உலக சினிமா வரலாற்றிலேயே யாருக்கும் சாத்தியபடவுமில்லை இனியும் அதற்க்கான சாத்தியமும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் எதிர்மறை விமர்சனங்கள் மூலம் அவரின் அசாத்திய வெற்றியை குறைத்து மதிப்பிடும் செய்திகள் வந்தாலும்கூட ரஜினியை வெல்வது சுலபமல்ல என்கிற உண்மையை சராசரி மக்களும் அறிவர். இவரின் சூப்பர்ஸ்டார் பெயருக்குத்தான் கடந்த 20 வருடங்களாக அடுத்த தலைமுறை நடிகர்கள் இடையே மூன்றாம் உலகப்போரைவிட முட்டி கொண்டிருக்கின்றது போர்பதற்றம்.
கடந்த 20 வருடங்களாக பிரசாந்த், விக்ரம், விஜய், அஜித், விஷால், சிம்பு,தனுஷ் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்கள் அவ்வப்போது சில வெற்றிகளை கொடுத்தவுடன் உடனடியாக அடுத்த சூப்பர் ஸ்டார் இவரா என்கின்ற கேள்விகள் எழும் இந்த தொடர்கதை மோகன், ராமராஜன் ,விஜயகாந்த், ராஜ்கிரன், சரத்குமார் என்கிற வரிசையில் இருந்து அடுத்த தலைமுறை வரிசைக்கு மாறியதுதான் மிச்சம். ஆனால், அதற்கான தொடர் வெற்றிகளை மாபெரும் வெற்றிகளை மேற்கண்ட முன்வரிசை, பின்வரிசை நடிகர்களால் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தலைமுறை மாற்றங்கள் நடப்பது காலத்தின் கட்டாயம் என்றாலும்கூட ரஜினி அதில் விதிவிலக்காக இருந்தார். ஆனாலும், ரஜினி தொடர்ந்து பயணிப்பது என்பது வயது மற்றும் உடல்நிலை காரணமாக சற்று கடினமே என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது இது இயற்கையாகவே வந்த மாற்றம் ரஜினி அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அந்தந்த காலகட்டங்களில் எந்த நடிகர் தொடர் வெற்றிகளையும் வசூல் படங்களையும் கொடுக்கிறாரோ அவரே அந்த கால சூப்பர்ஸ்டார் என்று கூறியிருந்தார். அதற்கான காலமாற்றம் தற்போது உருவாகிவிட்டது.
அரை நூற்றாண்டுகால அதிரடி சகாப்தத்தின் ஆட்டம் இயற்கையின் காரணமாக இடம்மாறுகிறது. ஆம், ரஜினி எப்படி எந்தப் பின்ணணியும் இல்லாமல் நுழைந்து அன்றைய தலைமுறை ஜாம்பவான்களை படிப்படியாக வீழ்த்தினாரோ அதே பாணியில் எதிர்பார்ப்பில்லாத கதாநாயகனாக மெரினாவில் ஆரம்பித்த அவரது ஆட்டம் கேடி பில்லா கில்லாடிரங்கா, எதிர்நீச்சலில் தொடர்ந்து எதிர்பார்ப்பில்லாமல் வெளிவந்த மான்கராத்தே காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்கள் ரஜினி தவிர்த்த முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களின் வசூலையும் அசால்டாக எட்டிப்பிடித்தது. ஆம், அவர்தான் எங்க வீட்டுப்பிள்ளையென அனைவராலும் கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன். குறிப்பாக காக்கிச்சட்டை படம் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை விட ஓபனிங்கிங் என்று ஊடகங்களால் மட்டுமே அழைக்கப்பட்ட நடிகரின் ஓபனிங்கைவிட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இது ரஜினியின் ஆரம்பகால அதிரடி வசூலை ஞாபகப்படுத்தியது. ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் படங்கள் எப்படி ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல்களை தாண்டியதோ அதே நிலையை சிவகார்த்திகேயனுக்கும் தொடர்ந்தது. அடுத்த ரஜினி சிவகார்த்திகேயன் தான் என்பதை வினியோகஸ்தர்கள் உணர்ந்தனர். அதனாலேயே, மிகக்குறுகிய காலகட்டத்தில் ரஜினியை தவிர்த்த மிகப்பெரிய வியாபாரமாக ரெமோ படம் வியாபாரம் ஆனது பலரின் புருவங்களை மட்டுமல்ல இதயத்துடிப்பையும் எகிறவைத்தது. (சமூகவலைதளங்களில் சதிராடப்படும் நூறுகோடி இருநூறுகோடி கதை எல்லாம் அதிகாரபூர்வ தகவல்களாகாது) இதற்கு முந்தைய காலகட்டங்களில் விக்ரம், சூர்யா போன்றோர் ரஜினி படங்களை தவிர்த்த உச்சபட்ச வியாபாரமாக தங்களது மார்க்கெட்டை நிலைநிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிவகார்த்திகேயன் அந்த நிலையை தொடர்வது அவரது ஆடியன்ஸ் வலிமையை உணர்த்தியது.
ஆரம்ப காலத்தில் ரஜினியின் சாதாரண கமர்சியல் படங்கள் எப்படி வசூல் புரட்சியை செய்ததோ அதே பாணியில் ரஜினி படங்களை தவிர்த்து இரண்டாவது மூன்றாவது வாரங்களில் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் கடந்த ஒரே திரைப்படமாக இன்றளவும் சீமராஜா படமே தொடர்வது சிவகார்த்திகேயன் தனக்கு இணை யாரும் இல்லை என்பதை உணர்த்திய சாதனை என்பதை எவராலும் மறுக்கமுடியாது. முந்தைய சிவகார்த்திகேயன் படங்களைப்போன்று நேர்மறையான விமர்சனங்களை சீமராஜா பெறவில்லை என்றாலும் கூட அப்படத்தின் வசூலும் ரஜினி படத்திற்கு அடுத்து இரண்டு மூன்று வாரங்களில் அதிக தியேட்டர்களில் கடந்த கதாநாயகன் என்கின்ற பெயரும் சிவகார்த்திகேயனை பாக்ஸ்ஆபீஸ்கிங்காகவே அடையாளப்படுத்தியது.
அதற்குப்பிறகு வந்த ஓரிரு படங்கள் குறிப்பாக மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் கூட ஒரு நிலையான வசூலைப் பெற்றது சன் பிக்சர்ஸ் ரஜினி படத்தை தவிர்த்து பல படங்களை விநியோகம் செய்திருந்தாலும் நேரடியாக படம் தயாரிப்பதற்கு 8 வருடங்கள் ஆனது. அந்த எட்டு வருடங்களில் ரஜினிக்கு இணையான கதாநாயகர்களாக அவர்கள் எவரையுமே அடையாளப் படுத்தவில்லை. சிவகார்த்திகேயனின் சீமராஜாவுக்கு அந்த நிறுவனம் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக ஒரு முன்ணணி நடிகர் வலியவந்து சன்பிக்சர்ஸிடமும் பெரிய இயக்குனரிடமும் ஓட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் தாக்கம் அடுத்த தலைமுறை நடிகர்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் 70களின் இறுதியில் ரஜினி படங்கள் செய்தது. இப்படி சராசரி கமர்சியல் படங்கள் மிகப்பெரிய வசூல் புரட்சியை ஏற்படுத்தியது ரஜினிக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது.
ரஜினி அளவிற்கு படங்களை கொடுக்க முடியுமா என்பதும் தொடர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருந்தாலும்கூட ஒரு வசூல் நாயகனாக ரஜினிக்குப் பிறகு எந்தப் பின்னணியும் இல்லாமல் சராசரி குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயது ரசிகர்களையும் ரஜினிக்குப் பிறகு தன்னகத்தே கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், ரஜினியின் ஓய்வுக்குப் பிறகு சர்வ சாதாரணமாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்வதை காலம் கச்சிதமாக உருவாக்கியுள்ளது. இதை தக்கவைத்துக்கொள்வது சின்னரஜினி ரஜினிமுருகன் சிவகார்த்திகேயனிடம்தான் உள்ளது.