கமல்ஹாசனுக்கு பதிலாக, ‘பிக் பாஸ்’ சீஸன் - 2 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ஸாக தோன்றிய நிகழ்ச்சி ஸ்டார் விஜய் டி.வி.யில் கடந்த 100 நாட்களாக சக்கை போடு போட்டது. கிராமங்களின் குடும்பத் தலைவிகளில் இருந்து பெரும்பாலான தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து, தினமும் விவாதிக்கவும் செய்தனர். நடிகை ஓவியா, நடிகர் ஆரவ், பாடகர் சினேகன், கணேஷ் வெங்கட்ராம் என பலரை அதிகமாக பிரபலப்படுத்தியது இந்த நிகழ்ச்சி.
பெரிய திரையில் மின்னிக்கொண்டிருந்த கமல்ஹாசனை. சின்னத்திரைக்குள் இழுத்து வந்ததும் ‘பிக் பாஸ்’ தமிழ் சீஸன் - 1 நடத்திய சாதனை{!)தான். இதே காலகட்டத்தில் கமல்ஹாசனின் அரசியல் ‘என்ட்ரி’யும் பரபரப்பாக பேசப்பட்டதால், பிக் பாஸுக்கு கூடுதல் கிளாமர் கிடைத்தது. நிகழ்ச்சியின் முடிவில் ஆரவ், ‘பிக் பாஸ்’ வின்னராக அறிவிக்கப்பட்டார்.
அதைவிட, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயங்குனர் ஷங்கருடன் இணைந்து கமல்ஹாசன் அறிவித்தது அதிகம் பேசப்பட்டது. பிக் பாஸ் சீஸன் - 1 நிறைவு பெறுகிற சூழலில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கமல்ஹாசன் அறிவிப்புகளை வெளியிட்டதும் நினைவில் நிற்கும் அம்சங்களாக இருக்கின்றன.
எப்படியோ அரசியல் அபிலாஷைகள், இந்தியன் - 2 என தனது அடுத்தகட்ட இலக்குகளை முடிவு செய்துவிட்ட கமல் ஹாசன், தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சியில் நீடிக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார். சபாஷ் நாயுடு படமும் அவரால் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது.
வெற்றிகரமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீஸன் 2-ஐ அதன் தயாரிப்பாளர்கள் தயார் செய்யும் முடிவிலேயே இருக்கிறார்கள். கமல்ஹாசன் இடத்தில் பிக் பாஸ் தமிழ் சீஸன் - 2 நிகழ்ச்சிக்கு அவர்கள் நடிகர் சூர்யாவை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சூர்யா, சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. இதே ஸ்டார் விஜய் டிவி-யில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இயங்கியவர் சூர்யா. பிறகு தொடர்ச்சியான வேறு படங்களில் இயங்க வேண்டியிருந்ததால், அந்த நிகழ்ச்சியின் சீஸன் 2-ல் பிரகாஷ்ராஜூம், சீஸன் 3-ல் அரவிந்த் சாமியும் தோன்றினர். எனவே மீண்டும் அதே ஸ்டார் விஜய் மூலமாக சின்னத்திரைக்கு திரும்புவதில் சூர்யாவுக்கு நெருடல் இருக்காது என்கிறார்கள்.
தற்போது, கீர்த்தி சுரேஷுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கும் சூர்யா, அதை முடித்துக்கொண்டு பிக் பாஸ் தமிழ் சீஸன் 2-க்கு தயாராகும் வாய்ப்பு தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் எந்த நேரத்திலும் வெளியாகலாம்.