தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும், ஏதாவதொரு நல்ல காரியம் செய்வது விஜய்யின் வழக்கம். அது பெரும்பாலும் யாருக்காவது உதவித்தொகை வழங்குவதாகத்தான் இருக்கும். சென்னையைச் சுற்றியுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்துள்ள விஜய், தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சினிமாவைச் சேர்ந்த சங்கங்களுக்கும் உதவி செய்யத் தவறுவதில்லை.
ஒருமுறை, தன்னை வைத்துப் படம் இயக்கிய 10 இயக்குநர்களுக்கு, ஆளுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கினார் விஜய். அத்துடன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் வழங்கினார். இதுபோல், ஃபெப்சி உள்ளிட்ட பல சினிமா சங்கங்களுக்கும் அவ்வப்போது உதவி செய்துள்ளார் விஜய்.
இந்த வரிசையில், சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடன இயக்குநர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார் விஜய். இதனால், பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் சங்கத்தினர்.
பொதுவாக, தான் செய்யும் உதவிகள் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்பார் விஜய். ஆனாலும், வெளியில் எப்படியாவது அந்த செய்தி கசிந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது.