பாகுபலி படம் பிரம்மாண்டகளுக்கெல்லாம் சவால் விடும் பிரம்மாண்டமாகப் பதிவாகிவிட்டது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டி இன்னும் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறான் பாகுபலி. சினிமா நட்சத்திரங்கள் பலரும் பாகுபலியின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸே நாங்கள்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம்கூட பாகுபலியின் வெற்றியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள். எதற்காக சுற்றி வளைத்து சொல்ல வேண்டும். இந்தி சினிமாவின் கான்கள் பாகுபலி படத்தைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஏன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் கூட மூச்சுவிடவில்லை. தமிழ் சினிமாவில் பல்வேறு தொழில்நுட்பங்களை முதன்முதலாகப் பயன்படுத்திய கமல் ஹாசனும் வாய் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அனைவரது வாயையும் கட்டிப் போட்டிருக்கிறான் பாகுபலி. ஏன், ஆமிர் கானின் பிகே படத்தை ஒவர்டேக் செய்ததோடு இல்லாமல் இனி எவராலும் தொட்டுவிடமுடியாத உச்சத்துக்கு பாகுபலி போய்விட்டதே என்பதனாலா? இல்லை நம்மால் செய்ய முடியாததை நேற்றுவந்த ராஜமெளலி சாதித்துவிட்டாரே என்பதனாலா?
வாய்ப்பைத் தவறவிட்டவர்கள்
சரி அவர்களை விடுங்கள். “இந்தப் படத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது, இப்படியொரு நல்ல வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன்” என்று இப்போது பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்க்கலாமா?
“அமரேந்திரா பாகுபலியாகிய நான்” என்று கர்ஜிக்கும் குரலுடன் சொல்வதற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலிவுட்டின் டாம் க்ரூஸ் ஹிரித்திக் ரோஷன் தான். ராஜமெளலி கேட்ட நாட்களில் ஹிருத்திக் ரோஷனால் கால்ஷீட் கொடுக்க முடியாத காரணத்தினால் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னரே பிரபாஸுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.
பல்வாள் தேவனாக நடிக்க மாடல் ஆக இருந்து நடிகரான ஜான் ஆபிரகாம் தான் தேர்வு செய்யப்பட்டார். அவர் மறுத்த பிறகுதான் ராஜமெளலிக்கு ராணா கிடைத்தார்.
பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் கோபத்துக்குக்கூட ஆளாகியிருப்பார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரைப் பார்த்து மீண்டும் ஒருமுறை காதலில் விழுந்திருப்பார்கள். பாகுபலிக்கு நிகரான தேவசேனா கேரக்டருக்கு முதலில் கோலிவுட்டின் மகாராணியாக வலம் வரும் நயன்தாராதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பல படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்குக் கிடைத்தது. ஆனால் அனுஷ்காவின் தேர்வு மிகக் கச்சிதமாக அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்தியது.
கர்ஜிக்கும் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில், 50 வயதாகியும் அழகும் ஈர்ப்பும் குறையாமல் இருக்கும் முன்னாள் இந்திய சினிமாவின் மகாராணி ஸ்ரீதேவிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. பிறகுதான் நிலாம்பரி ரம்யா கிருஷ்ணன் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார்.
முதல் பாகத்தில் ஒரு பாடல், சில காட்சிகள் மற்றும் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் என வந்துபோன அவந்திகா கதாபாத்திரத்துக்கு முதலில் பாலிவுட்டின் சோனம் கபூர் தான் தேர்வானார். சில காரணங்களால் அவர் மறுக்க, அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்தது.
ராஜமெளலி முதலில் தேர்வு செய்தவர்கள் இந்தப் படத்தில் நடிக்காமல் போனதால் அவருக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. சொல்லப் போனால் இந்தப் பாத்திரத்தில் நடித்தவர்கள்தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியானவர்களோ என்று சொல்லும் அளவுக்குக் கச்சிதமாகப் பொருந்தி போனார்கள். படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. வாய்ப்பை தவறவிட்டவர்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.