/indian-express-tamil/media/media_files/2025/10/10/trisha-2025-10-10-20-41-06.jpg)
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 90-களில் திரையுலகில் கால் பதித்த இவர் 20-ஆண்டுக்கும் மேலாக திரையுலகில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். நடிகை த்ரிஷா திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் செய்து கொண்டிருந்தார். பின்னர், கடந்த 1999-ஆம் ஆண்டி பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, கடந்த 2002-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மெளனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.
இதையடுத்து, ’சாமி’, ‘லேசா லேசா’, ‘உனக்கு பதினெட்டு எனக்கு இருபது’, ‘கிங்’, ‘ஆறு’, ‘விடாமுயற்சி’, ‘லியோ’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்றும் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துள்ளார். நடிகை த்ரிஷா அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். அண்மையில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் நடிகை த்ரிஷாவும் காதலித்து வந்ததாக செய்தி பரவியது. அதுமட்டுமல்லாமல், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதை உறுதி செய்யும் வகையில் இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றனர். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக த்ரிஷாவிற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது.
நடிகை த்ரிஷா எந்த நடிகர்களின் படங்களிலும் ஒரு பாடலுக்கு என்று நடனமாடியது இல்லை. ஆனால், விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் ‘மட்ட’ பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடனமாடியிருந்தார். இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர், விஜய் - த்ரிஷா தொடர்பாக பல கிசுகிசுக்களும் சமூக வலைதளத்தில் உலா வந்தது.
நடிகை த்ரிஷா, சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் தகவல் பரவி வந்தது. அதுமட்டுமல்லாமல், இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாகவும் விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், திருமண வதந்திக்கு நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், “என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.