Advertisment

ஜெயலலிதா நினைவு தினம்: தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா - ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

ஒரு நடிகை, தன் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறாள்’ என்று சொல்லிருக்கிறார் ஜெயலலிதா.

author-image
cauveri manickam
Dec 02, 2017 11:22 IST
vennira-aadai-nirmala

ஜெயலலிதா தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை கொண்டவர். அவரது முதலாமாண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. தனி மனுஷியாக அரசியலில் நின்று போராடி ஜெயித்தவர் ஜெயலலிதா. தன்னை நம்பியவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான கதைகள் இருக்கின்றன.

Advertisment

ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமாகும்போது, அவருடன் அறிமுகமானவர் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா.

“நானும், ஜெயலலிதா அம்மாவும் ‘வெண்ணிற ஆடை’ படத்தில்தான் அறிமுகமானோம். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ஒரே ரூமைத்தான் ஷேர் பண்ணிப்போம். நாங்கள் இருவருமே ரிசர்வ்டு டைப் என்பதால், அவ்வளவாக பேசிக்கொள்ள மாட்டோம். இருந்தாலும், அவர் மனதில் என்மீது அன்பு இருந்திருக்கிறது. பிற்காலங்களில்தான் அதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாரதியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘பாரதி கண்ணம்மா’ என்ற நாட்டிய நாடகத்தைத் தயார் பண்ணச் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த நாட்டிய நாடகத்தை முதன்முறையாக அரங்கேற்றியபோது, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெயலலிதா அம்மாவும் பார்த்தார்கள்.

எப்போதுமே ஒரு டான்ஸர், இன்னொரு டான்ஸர் ஆடும் நடனத்தைப் பார்த்து, ‘நல்லா இருக்கு’ என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், ஜெயலலிதா அம்மா, ‘ரொம்பவே நல்லா இருக்கு’ என்று பாராட்டினார்கள். அவர்கள் பாராட்டியதால், அந்த நாட்டிய நாடகத்தை எல்லா இடங்களிலும் போடச் சொன்னார் எம்.ஜி.ஆர். அதுவும், அரசு நிதியுதவியுடன்.

இந்த நாட்டிய நாடகத்தை, என்னை மட்டும் பண்ணச் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். நாலைந்து பேரிடம் தனித்தனியாகப் பண்ணச் சொல்லியிருந்தார். ஜெயலலிதா அம்மாவுக்கு நடனம் தெரியும் என்பதால், அவர் பாராட்டியதால் என்னுடைய நாடகம்தான் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றுக்கும் அரசே நிதியுதவி செய்தது” என்று நினைவுகளில் இருந்து ஒரு சம்பவத்தை விவரித்தார்.

தொடர்ந்து, “நான், ஜெயலலிதா, ஸ்ரீவித்யா மூன்று பேரும் ‘தங்க கோபுரம்’ படத்தில் நடித்தோம். கதைப்படி, கல்லூரியில் நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஆனால், சூழ்நிலை காரணமாக சுந்தர்ராஜனை இரண்டாம் தாரமாக மணந்து கொள்வார் ஜெயலலிதா. அப்படிப் பார்த்தால், எனக்கு மாமியாராகவும், ஸ்ரீவித்யா கேரக்டருக்கு சித்தியாகவும் வந்துவிடுவார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, ‘வாழ்க்கை என்பது ஒரு நொடியில் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்ல முடிவதில்லை. வாழ்க்கை என்பது பெரிய புதிர்’ என்று சொன்னார் ஜெயலலிதா” என்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன பேசிக் கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். “சாதாரணமாகத்தான் பேசிக் கொள்வோமே தவிர, பெரிதாக ஒன்றும் இருக்காது. ஜெயலலிதாவின் தாய் சந்தியாவும் நடிகை என்பதால், ஜெயலலிதா குழந்தையாக இருக்கும்போது தாய்ப்பாசம் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால், தாயன்புக்காக அவர் ஏங்கியிருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே தெரியும்.

இதுபற்றி எஸ்.வரலட்சுமி கூட சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா குழந்தையாக இருக்கும்போது, சந்தியா ஷூட்டிங் சென்றிருக்கும் சமயங்களில், ‘அம்மா வேண்டும்’ என்று அழுவாராம் ஜெயலலிதா. அப்போது எஸ்.வரலட்சுமி, சந்தியாவின் புடவையை கட்டிக்கொண்டு ஜெயலலிதா பக்கத்தில் படுத்துக் கொண்டு தூங்க வைப்பார்களாம். இப்படி தாயன்புக்காக ஏங்கியிருப்பதை அவர் பேச்சில் உணர்ந்து கொள்ளலாம். அப்புறம், கல்லூரிக்குச் சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது” என்றவர், முக்கியமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

“எம்.என்.ராஜம் மகளுக்குத் திருமணம் நடைபெற்றபோது, ஜெயலலிதாவால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அதை நினைவில் வைத்திருந்து, இன்னொரு நாள் அவர் வீட்டுக்குத் தானே சென்று பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

வாழ்த்திவிட்டு திரும்பும்போது காரில் ஏறியபின், வழியனுப்ப வந்த எம்.என்.ராஜத்திடம், ‘நான் ஏன் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்து உன் பெண்ணை வாழ்த்தினேன் தெரியுமா? ஒரு நடிகை, தன் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறாள்’ என்று சொல்லிருக்கிறார் ஜெயலலிதா. அதில், எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது தெரியுமா?” என்று கேள்வியுடன் முடித்தார் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா.

ஜெயலலிதா நினைவு தின சிறப்புக் கட்டுரைகள் படிக்க...

1. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முதல் பெண் உறுப்பினர், ஜெயலலிதா - ச.கோசல்ராம்

2.“ஜெயலலிதா யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” – செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment