தன்னுடைய மனைவியின் பிறந்த நாளுக்கு, பேட்மிண்டன் அரங்கத்தைப் பரிசாக அளித்துள்ளார் அஜித் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்த ஷாலினி, மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய் ஜோடியாக ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஷாலினி, அஜித் ஜோடியாக ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தார்.
அப்போது அஜித் - ஷாலினிக்கு இடையில் காதல் மலர்ந்தது. அடுத்த ஆண்டே இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷாலினி, குழந்தைகள் வளர்ப்பிலும், தனக்குப் பிடித்த பேட்மிண்டன் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வந்தார். பல போட்டிகளில் கூட அவர் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை கடந்த 20ஆம் தேதி கொண்டாடினார் ஷாலினி. 38 வயது முடிந்து 39வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள ஷாலினிக்கு, பேட்மிண்டன் அரங்கத்தைப் பரிசாக அளித்துள்ளார் அஜித். திருவான்மியூரில் உள்ள வீட்டிலேயே நவீன வசதிகளுடன் இந்த பேட்மிண்டன் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.