அஜித் - சிவா நான்காவது முறையாக இணையும் படம், அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தின் மூலம் முதன்முறையாக அஜித்துடன் இணைந்தார் ‘சிறுத்தை’ சிவா. தமன்னா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், விதார்த், சந்தானம், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 40 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 120 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.
எனவே, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கு வழங்கினார் அஜித். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் இருவரும் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாக, மூன்றாவது முறையாகவும் அஜித் - சிவா ஜோடி இணைந்தது.
அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த ‘விவேகம்’ படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ரிலீஸானது. விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பே, அடுத்த படமும் சிவா இயக்கத்தில் நடிக்கிறேன் என வாக்கு கொடுத்தாராம் அஜித்.
‘விவேகம்’ ரிலீஸ் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பல லாஜிக் ஓட்டைகளுடன் சுமாராகத்தான் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், போட்ட காசை எடுக்கவில்லை என்கிறார்கள். மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டமாம்.
‘விவேகம்’ தோல்வியைத் தழுவியதால், மறுபடியும் சிவாவுடன் அஜித் சேர மாட்டார் என்றார்கள். ஆனால், கொடுத்த வாக்குப்படி நான்காவது முறையாகவும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித் என்பது உறுதியாகிவிட்டது.
அத்துடன், ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதால், மறுபடியும் அந்த நிறுவனத்துக்கே நடித்துக் கொடுக்கிறார் அஜித். பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படம், அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.