scorecardresearch

அசின் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்திய அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசின் குழந்தையைத் தூக்கியபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் அசின். குஞ்சக்கோ போபன் நடித்த ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ என்ற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஜெயம் ரவி ஜோடியாக ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அசின், ‘கஜினி’, ‘போக்கிரி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் திருமணம் நடைபெற்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு, நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகுல் சர்மா.

நாளை (அக்டோபர் 26), அசினுக்குப் பிறந்த நாள். அவருக்கான மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக இந்தக் குழந்தை பிறந்திருப்பதாக ராகுல் சர்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அசினின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசின் குழந்தையைத் தூக்கியபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அக்‌ஷய் குமாருடன் ‘ஹவுஸ்ஃபுல் 2’ மற்றும் ‘கைதி நம்பர் 786’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அசின். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அக்‌ஷய் குமார், ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Akshay kumar shares first picture of asin and rahul sharmas baby girl