ரஜினியின் ‘2.0’ படத்துடன் மோதுகிறதா அக்‌ஷய் குமாரின் ‘பத்மன்’?

இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே இப்படிச் சொன்னதால், எந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாகும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் ‘2.0’ படத்துடன், அக்‌ஷய் குமாரின் ‘பத்மன்’ படம் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் நடைபெற்று வரும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜனவரி 26ஆம் தேதி தான் தயாரித்து, நடிக்கும் ‘பத்மன்’ படம் ரிலீஸாகும் என அக்‌ஷய் குமார் அறிவித்தார். ‘2.0’ படம் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்பட ஏகப்பட்ட மொழிகளில் ரிலீஸாகிறது. அப்படியிருக்கும்போது ஒரே நேரத்தில் அக்‌ஷய் குமார் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸானால், இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

இதனால், ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது என செய்திகள் வெளியாகின. அதை மறுத்த ‘2.0’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, ‘திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும்’ என அறிவித்தது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே இப்படிச் சொன்னதால், எந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாகும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பத்மன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே மற்றும் சோனம் கபூர் ஆகியோரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அக்‌ஷய் குமார். இவர்கள் இருவரும் அக்‌ஷய் குமாருடன் ஜோடி சேர்வது இதுதான் முதல் முறை. அந்த ட்வீட்களில், ரிலீஸ் தேதி ஜனவரி 26 என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், ‘2.0’ ரிலீஸ் தேதியில் மறுபடியும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் கதைதான் ‘பத்மன்’ என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடவும் வாய்ப்பு இருக்கிறது.

×Close
×Close