‘நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை’ என சந்தானம் கூறியுள்ளார்.
சந்தானம், வைபவி ஷாண்டில்யா, விவேக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்து, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. சிம்பு இசையமைத்துள்ள ஆடியோவை, தனுஷ் நாளை வெளியிடுகிறார். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸாகும் வருகிற 22ஆம் தேதி, இந்தப் படமும் ரிலீஸாகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த சந்தானம், “என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்புவை, இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துவது எனக்குப் பெருமை. நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சொன்ன புகாருக்கு சிம்பு பதில் அளிப்பார்.
சினிமாவைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்னைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பிரச்னை என வரும்போது, பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கும். என்னுடைய பிரச்னை பெரிதானது, நான் நடிகன் என்பதால்தான்.
என்னுடைய படமும், சிவகார்த்திகேயன் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. நான் சிவகார்த்திகேயனுக்குப் போட்டி இல்லை. அப்படி போட்டி என்றாலும், அது ஆரோக்கியமான போட்டிதான். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது இல்லை. எதிர்காலத்தில் நல்ல பதில் தருவேன்.
கடன் வாங்கினால் திருப்பிக் கேட்கும்போது கொடுக்க வேண்டும். கடுமையாக உழைத்தால், நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். இயற்கையாக நடந்தால் விதி, செயற்கையாக நடந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு. தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்காக நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்குமாறு சொல்வது நியாயம் இல்லை. உழைத்ததற்கான பணத்தைத்தான் பெற்றுக் கொள்கிறோம். அதனால், எங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை” என்று பேசினார்.