“அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கவில்லை” – நிவின் பாலி மறுப்பு

“எனக்கு அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை. மீடியா மூலமாகவே இந்த செய்தியைத் தெரிந்து கொண்டேன்” என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

‘அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை’ என மலையாள நடிகர் நிவின் பாலி மறுத்துள்ளார்.

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தப் படமே தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ஆனால், மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. அதன்பிறகு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்துக்கும் தமிழ் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தந்தனர். சென்னையிலேயே அந்தப் படம் 225 நாட்கள் ஓடியது.

இருந்தாலும், நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நிவின் பாலியின் தீராத ஆசையாக இருந்தது. அந்த ஆசையை ‘ரிச்சி’ நிறைவேற்றியிருக்கிறது. கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘உளிடவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்தான் இது. ஆனால், திரைக்கதை சரியாக வடிவமைக்கப்படாததால், தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை.

இந்நிலையில், அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா – ஒளிப்பதிவாளர் வெற்றி கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் இது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில், மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார் நிவின் பாலி என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தத் தகவலை நிவின் பாலி மறுத்துள்ளார். “எனக்கு அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை. மீடியா மூலமாகவே இந்த செய்தியைத் தெரிந்து கொண்டேன்” என நிவின் பாலி தெரிவித்துள்ளார். அத்துடன், மோகன்லான் மற்றும் மம்மூட்டி போன்ற மலையாள சீனியர் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Am not getting any approach for acting in ajiths viswasam says nivin pauly

Next Story
ஓ.பி.எஸ்.ன் தர்ம யுத்தத்தை கலாய்க்கும் தமிழ்ப்படம் 2.0 போஸ்டர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express