கண்தானத்தை வலியுத்தி ’அமலா ஹோம்’ தொடக்கம்!

உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் பார்வையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்கிறார், நடிகை அமலா பால்.

கண்தானத்தை வலியுறுத்தி நடிகை அமலாபால், ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

மைனா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் விஜய், தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர், இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்தும் பெற்றார். சமீபத்தில் தனக்கு தொழிலதிபர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்து பரபரபாக பேசப்பட்டார். தனது சொகுசு காரை, புதுவையில் பதிவு செய்து, வரி மோசடி செய்ததாக வழக்கில் சிக்கினார்.

இந்நிலையில் அவர் கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து நடிகை அமலாபாலிடம் கேட்ட போது, ‘‘கண் பாதுகாப்பு, தானம் குறித்து பேசுவதற்காக சமீபத்தில் சில புள்ளி விபரங்களை சேகரித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் பார்வையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்களில் 70 சதவிகிதம் பேரை அறுவை சிகிச்சையால் குணப்படுத்த முடியும். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே குறைவாக உள்ளது.

போதிய அளவுக்கு கண் தானம் இல்லாததும் இதற்கு காரணம். தற்போதுள்ள நிலையில் ஆண்டில் வெறும் 40 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யக் கூடிய அளவில் கண் தானம் நடக்கிறது.

நான் எனது கண்களை தானம் செய்துள்ளேன். அதோடு, கண் தான பற்றாக்குறையை நீக்கவும் அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரடெடவும் ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். இதில் பலரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

×Close
×Close