வரி செலுத்த மறுப்பு : கைதாகிறாரா அமலா பால்?

குற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலிடம் விசாரணை நடத்த உள்ளனர். எனவே, அமலா பால் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.

சொகுசு கார் பதிவு விவகாரத்தில் அமலா பால் வரிசெலுத்த மறுத்தவிட்ட நிலையில், அவர்மீது கைது நடவடிக்கை பாயலாம் எனத் தெரிகிறது.

அமலா பால், கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மாத்ருபூமி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார் அமலா பால். ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புடையது இந்தக் கார்.

கேரளாவைச் சேர்ந்த அமலா பால், அங்கு காரைப் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாயை வரியாகக் கட்ட வேண்டும். எனவே, புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். அங்கு பதிவுசெய்ய ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும்.

அமலா பாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெரேசா தெருவைச் சேர்ந்த ஒரு இளைஞரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஞ்ஜினீயரிங் படித்துவரும் அந்த இளைஞருக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் கொடுமையான விஷயம். அமலா பாலின் இந்த செய்கையால், கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் ஃபாசில் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோரும் இதேபோல் போலி முகவரியில் காரைப் பதிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டது மாத்ருபூமி நிறுவனம்.

இதற்கிடையில், வரி ஏய்ப்பு செய்த அமலா பால் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகை அமலா பால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்ய முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அமலா பால் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததைப்போல் வேறு யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று விசாரணை நடத்துமாறு புதுச்சேரி போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் அவர் விசாரணை நடத்துவார்” என தெரிவித்தார்.

இந்நிலையில், அமலா பால் புதுச்சேரி முகவரியில் கார் பதிவு செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அமலா பால் தங்கியிருப்பதற்கான வீட்டு பிரமாணப் பத்திரத்தை அமலா பால் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக கார் வாங்கும்போது எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒரு வருடத்திற்குள் சொந்த மாநிலத்திற்குள் பதிவுசெய்து கொண்டால் போதும் எனத் தெரிவித்துள்ள ஷாஜகான், அமலா பால் புதுச்சேரியில் காரைப் பதிவுசெய்து நான்கு மாதங்களே ஆகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு எர்ணாகுளம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அமலா பாலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர் தாக்கல் செய்த ஆவணங்களில், புதுச்சேரியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருப்பதற்கான ஆவணத்தையும் சமர்ப்பித்திருந்தார் அமலா பால். ஆனால், அந்த ஆவணம் போலி என்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், வரி செலுத்தக் கோரி அமலா பாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், வரி செலுத்த முடியாது என அமலா பால் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எனவே, போலி ஆவணம் கொடுத்த வரி ஏய்ப்பு செய்த புகாரில் அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கொச்சி குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித்து, கேரள போக்குவரத்து ஆணையர் அனில்காந்துக்கு உத்தரவிட்டுள்ளனர். கேரள போக்குவரத்துத்துறை அதிகாரிகள் புதுச்சேரிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ள நிலையில், குற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலிடம் விசாரணை நடத்த உள்ளனர். எனவே, அமலா பால் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.

இதேபோல் ஃபஹத் ஃபாசிலுக்கும் கேரள போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருந்தனர். ‘தான் கேரளாவில் வரி செலுத்தி விடுவதாக’ பதில் கடிதம் அனுப்பியுள்ளார் ஃபஹத் ஃபாசில்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close