‘பத்மாவத்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரன்வீர் சிங்கைப் பாராட்டி பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் பாட்ஷா அமிதாப் பச்சன்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவத்’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய இந்தப் படம், கடந்த 25ஆம் தேதி ரிலீஸானது. அப்படியும் சில இடங்களில் ரிலீஸாக விடாமல் போராட்டக்காரர்கள் இடையூறாக இருந்தனர். ஒருசில இடங்களில் வன்முறையும் வெடித்தன.
ஆனால், ‘பத்மாவத்’ படத்தில் அப்படி எந்தவொரு காட்சியுமே ராஜ்புத் வம்சத்தினருக்கு எதிராகவோ, ராணி பத்மினியைத் தவறாகச் சித்தரித்தோ இல்லை என்பதுதான் உண்மை. இதனால், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது ‘பத்மாவத்’. தமிழ்நாட்டில் கூட கடந்த வாரம் ரிலீஸான அனைத்துப் படங்களின் வசுலைவிட, ‘பத்மாவத்’ படத்தின் வசூல் அதிகம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.
இந்நிலையில், ‘பத்மாவத்’ படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங்கைப் பாராட்டி, பூங்கொத்து அனுப்பி வாழ்த்தியுள்ளார் அமிதாப் பச்சன். இந்தத் தகவலை, புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரன்வீர் சிங். ‘இந்த வாழ்த்து எனக்கு விருது கிடைத்தது போல் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.
இதேபோல், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும் அமிதாப் பச்சனிடம் வாழ்த்து பெற்றுள்ளார் ரன்வீர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.