‘அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை’ என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், கம்பெனி புரொடக்ஷன் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட அசோக் குமார், அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீஸார் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக 306 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரைத் தேடி மதுரைக்கு மூன்று தனிப்படைகள் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அன்புச்செழியன் பற்றிய திடுக்கிடும் தகவல்களை திரைத்துறையினர் கூறி வருகின்றனர். அன்புச்செழியனால் அஜித், இசையமைப்பாளர் டி.இமான் கூட மிரட்டப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை’ என்று ட்விட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே...” என கூறியுள்ளார்.
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...
— Seenu Ramasamy (@seenuramasamy) November 23, 2017
விஷால் உள்பட சினிமாத்துறையினர் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக இருக்கும்போது, சீனு ராமசாமி இப்படி கூறியிருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.