தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், இரண்டாவது முறையாக தெலுங்குப் படம் ஒன்றுக்கு இசையமைக்கிறார்.
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்த அனிருத், விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், முதன்முறையாக இரண்டு தெலுங்குப் படங்களுக்கு இசை அமைக்கிறார். இரண்டு படங்களையும் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் படத்துக்குத்தான் முதலில் கமிட்டானார் அனிருத். அந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது.
தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ். ஜூனியர் என்.டி.ஆரின் 28வது படமான இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார். இதன் பூஜை, இன்று நடைபெற்றது. தமிழைப் போலவே தெலுங்கின் முன்னணி ஹீரோக்களும் இசையமைப்பதால், தெலுங்கிலும் பிரபலமாக இருக்கிறார் அனிருத்.
‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘இரண்டாம் உலகம்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கத்தி’, ‘மாரி’, ‘நானும் ரெளடிதான்’, ‘வேதாளம்’, ‘தங்க மகன்’, ‘ரெமோ’, ‘ரம்’, ‘விவேகம்’ என தனுஷ் இதுவரை இசையமைத்த தமிழ்ப் படங்களில் மூன்றைத் தவிர மேற்சொன்ன எல்லா படங்களுமே தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கு கிடைத்த வரவேற்பே, நேரடி தெலுங்குப் படங்களின் வாய்ப்பை அனிருத்துக்கு பெற்றுத் தந்துள்ளது.