6 வருடங்களுக்குப் பிறகு ‘ரோசாப்பூ’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார் அஞ்சலி.
தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துள்ள அஞ்சலி, 2011ஆம் ஆண்டு வெளியான ‘பய்யன்ஸ்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஜெயசூர்யா, ரோகிணி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
அதற்குப் பிறகு ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்த அஞ்சலி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடித்தார். ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் நடித்த அஞ்சலி, 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். ‘ரோசாப்பூ’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, வினு ஜோசப் இயக்குகிறார்.
‘ரோசாப்பூ’ படத்தில் பிஜு மேனன், நீரஜ் மாதவ் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். விக்ரமின் ‘இருமுகன்’ மற்றும் ‘சாமி ஸ்கொயர்’ படங்களைத் தயாரித்த தமீம் ஃபிலிம்ஸ் ஷிபு தமீம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதுதவிர, ‘ஆத்மசக்தி’ என்ற மலையாளப் படத்திலும் நடிக்கிறார் அஞ்சலி.
தமிழில் அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தரமணி’. ஜெய் ஜோடியாக நடித்துள்ள ‘பலூன்’, இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. அடுத்து மம்மூட்டி ஜோடியாக நடித்த ‘பேரன்பு’ ரிலீஸாக இருக்கிறது. தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.