மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்துவரும் இந்தப் படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் இசையமைத்து வருகிறார் அனிருத். அவர் இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடல், சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இன்னொரு பாடலான ‘இறைவா’, நவம்பர் 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
‘வேலைக்காரன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். இன்று முதல் மொத்தம் 3 நாட்களுக்கு அங்கு ஷூட்டிங் நடக்கிறது. பிருந்தா இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கிறார்.
இந்நிலையில், படத்தின் எடிட்டரான விவேக் ஹர்ஷன் விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ‘ஜிகர்தண்டா’ படத்துக்காக ‘சிறந்த எடிட்டருக்கான’ தேசிய விருது பெற்றவர் இவர். ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களுக்கு இவர்தான் எடிட்டர்.
‘வேலைக்காரன்’ படம் தொடங்கியதில் இருந்து எடிட்டராகப் பணியாற்றிவந்த இவர், தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என்கிறார்கள். அவருக்குப் பதிலாக, அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விஜய்யின் ‘மெர்சல்’ படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய ஆண்டனி ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விவேக் ஹர்ஷன் எடிட் செய்ததுபோக, இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே நான்கரை மணி நேரம் இருந்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளிவந்தன. அந்தப் பிரச்னை காரணமாகத்தான் விவேக் ஹர்ஷன் விலகியிருக்கக் கூடும் என்கிறார்கள்.