‘மெர்சல்’, இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வார்த்தை. தமிழ்நாடு மட்டுமே தாரக மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருந்த இந்த வார்த்தையை, இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திவிட்டனர் பாஜகவினர்.
பாஜக தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன். இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸைச் சேர்ந்த திருநாவுக்கரசர், குஷ்பூ, இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் என பல பிரபலங்கள் இந்தப் பிரச்னை குறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவ்வளவு ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் ஃபேக் ட்விட்டர் ஐடியில் இருந்துகூட ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து வெளியாகியிருக்கிறது.
ஆனால், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என இரண்டு பெரிய பதவிகளில் இருக்கும் விஷால், இப்போதுதான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். டி.ஆர். - சாய் தன்ஷிகா பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளில் முதல் ஆளாக குரல் கொடுத்தவர் விஷால். ஆனால், விஜய் விஷயத்தில் அவர் இவ்வளவு தாமதமாக கருத்து தெரிவித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் இருந்து ‘சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்’ என்று தைரியமாகப் பேசிய விஷால், ‘மெர்சல்’ படம் குறித்த தாமதமாக வாய் திறந்தது காரணமாகத்தான் என்பது கோடம்பாக்கத்தில் இருப்பவர்களின் பேச்சாக இருக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் ராகுல் காந்தி கூட இந்தப் பிரச்னை பற்றிக் கேள்விப்பட்டு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தாமதம் செய்தது ஏன்? என்பது கேள்வியாக இருக்கிறது.