Advertisment
Presenting Partner
Desktop GIF

நமது அப்பாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா? 'அப்பன்' தரும் அனுபவம்

கூடுதலாக ஒரு காட்சியையும் கூற வேண்டும். உனது அப்பா போல் நீயும் ஆகிவிட்டால் நான் உன் அம்மாவைப்போல் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று ரோசி தனது கணவரிடம் கூறுவார். அப்போது அவரது கணவர் தனது அப்பாவால் ஊர்காரர்கள் தனது உடையை நீக்கி சிறுவயதில் எப்படி அவமதித்தார்கள் என்று கூறி அழுவார். அந்த அழுகை நம் நெஞ்சை உலுக்கும். ஒரு ஆதிக்கத்தை பார்த்து வளரும் ஒரு ஆண் ஒருபோதும் அதை செய்யக்கூடாது என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மனநிலையை, இயக்குநர் நமக்கு உணர்வுப்பூர்வமாக கடத்தியிருப்பார்.

author-image
Vasuki Jayasree
New Update
நமது அப்பாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா? 'அப்பன்' தரும் அனுபவம்

சோனி லைவில் ( SONY LIV) வெளியாகி இருக்கும் மலையாள திரைப்படம்  “ அப்பன்” (Appan ). இந்த வார்த்தையே படத்தின் கதை எதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் என்பதை விளக்குகிறது.

Advertisment

இப்படத்தை அறிந்து கொள்வதற்கு முன்பாக, நாம் தமிழ் சினிமாவில் இதுவரை  கண்டிருக்கும் அப்பாக்களை குறித்து பேசியாக வேண்டியிருக்கிறது. மகள் சைக்கிளை ஓட்டி செல்லும்போது, பின் தொடரும் அப்பாவாக வருகிறார் ’அபியும் நானும்’ பிரகாஷ் ராஜ். மகளே தன்னை செதுக்குகிறார் என்று கூறுவார். இதுபோலவே ’தங்க மீன்களில்’ கடன் வாங்கி மகளுக்கு படிப்பு செலவை பார்க்கும் அப்பாவாக வருவார் இயக்குநர் ராம். இப்படி மகளை நேசிக்கும் அப்பாக்களை பார்த்திருக்கிறோம். இதுபோலவே “ dady is my hero” ’வாரணம் ஆயிரம்’ படத்தில் வரும்  நட்பான அப்பா. ’எம்.மகன்’  படத்தில் மகனுக்கு ஈரல் பிடிக்கவில்லை என்றாலும் வலுகட்டாயமாக திணிக்கும் அப்பா. சிவார்த்திகேயன் டான் படத்தில் வரும் சமுத்திரக்கனி.

இப்படியாக அப்பா எப்படியாக இருந்தாலும், அவர் நச்சுத்தன்மை (toxic) பொருந்தியவராக இருந்தாலும். பணம் ஈட்டி வருவதால், பணத்தை குழந்தைகள் படிப்பிற்காக செலவு செய்வதால் மட்டுமே அப்பாவை கொண்டாட வேண்டும் என்று இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்பா எப்படியாக இருக்கட்டும் அவர் என் அப்பா ! அவர் எப்படி உழைத்திருக்கிறார் தெரியுமா ? என்றுதான் நாம் கற்பிக்கப்பட்டிக்கிறோம். பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

இங்கே அப்பா என்பவர் தனி நபர் அல்ல. ஆண் ஆதிக்கத்தின்  மையம். அல்லது அதிகார மையம். பொருள் ஈட்டுவதால், அவர் கெட்ட வார்த்தைகளை பேசலாம், பெண்களை இழிவாக நடத்தலாம், திருமணத்தை மீறிய பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம்.  இப்படியாக இத்யாதி எல்லா ஆணவமான விஷயங்களையும் செய்யும் அதிகாரம் அவரிடம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள தூண்டும் விஷயம்தான் இங்கே ஆதிக்கம். அதை ஆண் செய்வதால் ஆண் ஆதிக்கம் என்று வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு சமூக மாற்றம் நடைபெற  வேண்டும் என்றால் ஆதிக்கத்தை நோக்கி மாற்றம் என்ற கல்லை எறிய வேண்டியிருக்கிறது. அப்படி இங்கே நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆண் அதிகார மையத்தை நோக்கி எறியபட்ட ஒரு கல்தான் ’அப்பன்’ திரைப்படம். ஆண் ஆதிக்கத்தின் எல்லா கண்ணிகளையும் சல்லி சல்லியாக உடைத்திருக்கிறது இப்படம்.

கதை சுருக்கம்:

இட்டாசான் ( அப்பாவாக வரும் அலன்சியர் சோபஸ்) அப்பாவாக வருகிறார். இவருக்கு ஏற்பட்ட விபத்தால், நடக்க இயலாது படுக்கையில் இருக்கிறார். இவரின் மனைவியாக வரும் குட்டியம்மாவும், மருமகளாக வரும் ரோசி ( அனன்யா) அப்பாவை பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் மரணமடைய வேண்டும் என கனவு காணும் காட்சியில் படம் தொடங்கிறது. இட்டாசனுக்கு ( அப்பன் ) மகனாக வரும் நிசோஜூ ( சன்னி வைனே) அப்பாவின் மரணத்திற்கு காத்திருக்கிறார். இவர்கள் ஏன் அவர் மரணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதை படம் மிகவும் எதார்த்தமாக விவரிக்கிறது.

இட்டாச்சன் மரணிக்க வேண்டும் என்று அவர்கள் மட்டுமல்லாது ஊரில் இருக்கும் சிலரும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அப்பாவை கொலை செய்ய மாய மந்திரம் செய்யவதற்கு சம்மதிக்கிறார் மகன். தன் மரணத்திற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள் என்பது இட்டாச்சனுக்கும் தெரிகிறது. ஆனால் அவருக்கு வேறொரு ஆபத்தும் காத்திருக்கிறது. அப்பாவின் மரணத்திற்காக காத்திருக்கும் மகன் அப்பாவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறான். இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை யார் செய்கிறார்கள் என்பதும், எந்த இடத்தில் நிகழ்கிறது என்பதும்தான் அட்டகாசமான அம்சம்.

இங்கே குறிப்பாக ஆண் ஆதிகத்திற்கு துணைபோகும் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் கேட்கப்படும் கேள்வி இப்படத்திலும் கேட்டப்படுகிறது. மருமகளாக வரும் ரோசி மாமியாரிடம் கேட்பார் “ அவர்தான் நீங்கள் இருக்கும்போதே பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறாரே. நீங்கள் ஏன் அவரை அப்படி விட்டு செல்லவில்லை” என்று . அதற்கு குட்டியம்மா கூறும் பதில்தான் முக்கியமானது, மேலும் வலி நிறைந்த எதார்த்தம் .“ இங்கே இருப்பதைவிட எனது வீட்டில் அதிக வறுமை இருந்தது. அங்கே எப்படி செல்வது என்று இங்கே இருந்துவிட்டேன்”  என்பார்.

இதே கேள்வி இட்டாச்சனோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஷீலாவிடமும் கேட்டக்கப்படுகிறது.  அவர் கூறும் பதில்தான் இங்கே முக்கியமான பதில் “ அப்பா மரணத்திற்கு பிறகு எனக்கு பாசமாகத்தான் பணம் கொடுக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் எனது உடலின் மீதுதான் அவருக்கு ஆசை என்று பின்புதான் தெரிந்தது. அவரின் நிலையை பார்த்து ஆறுதல் அடைவதற்காகவே நான் மீண்டும் வந்தேன் “ என அவர் கூறுவார்.

publive-image

இங்கே படத்தின் இறுதிகட்டம்தான்  ( climax ) அட்டகாசம். இட்டாச்சன்-யை ( அப்பன்) கொலை செய்ய ஒரு வில்லன் வருவான். ஆனால் அவரால் அவர் கொலை செய்யப்படமாட்டார். ஆனால் ஷீலாவால்தான் கொலை செய்யப்படுவார்.

அதற்கு ஷீலாவை பார்த்து அவர் கூறும் ஒரு வசனம்தான் காரணம். “ என்னங்க ஆண்களை கொலை செய்யலாமா? அப்படி கொலை செய்யனும்னா. எல்லா ஆண்களையும்தான் கொலை செய்யனும்” என்று நாம் கூறலாம். ஆனால் இங்கே கொலை செய்யப்படுவது என்பதை தீர்வாக காட்டவில்லை இயக்குநர். அந்த எதிர்ப்பு குரல் யாரிடத்திலிருந்து வர வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியமான விஷயமாக இருக்கிறது. மீண்டும் ஒரு ஆதிக்கம் நிறைந்த ஆணால் அவர் கொலை செய்யப்படவில்லை.  கேள்வி கேட்கத் தயங்கும். ஆதிக்கத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட, குரல் அற்ற ஒருவரால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்த எதிர்ப்பு மனநிலைதான் வேண்டும். இந்த கேள்வி எழுப்பும் குரல்தான் வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கவே இறுதி காட்சி அப்படி அமைந்திருக்கிறது.

கூடுதலாக ஒரு காட்சியையும் கூற வேண்டும். உனது அப்பா போல் நீயும் ஆகிவிட்டால் நான் உன் அம்மாவைப்போல் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று ரோசி தனது கணவரிடம் கூறுவார்.  அப்போது அவரது கணவர்  தனது அப்பாவால் ஊர்காரர்கள் தனது உடையை நீக்கி சிறுவயதில் எப்படி அவமதித்தார்கள் என்று கூறி அழுவார். அந்த அழுகை நம் நெஞ்சை உலுக்கும். ஒரு ஆதிக்கத்தை பார்த்து வளரும் ஒரு ஆண் ஒருபோதும் அதை செய்யக்கூடாது என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மனநிலையை, இயக்குநர் நமக்கு உணர்வுப்பூர்வமாக கடத்தியிருப்பார்.   

இந்திய சினிமாவிற்கே இப்படம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நீங்களும் நிச்சயம் பார்த்துவிடுங்கள்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment