/indian-express-tamil/media/media_files/2025/08/31/rahman-ar-2025-08-31-22-24-34.jpg)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , தான் ஆஸ்கர் விருதுகளை வென்றதற்கு, தான் இசையமைத்த புகழ்பெற்ற பாடலான "குவாஜா மேரே குவாஜா" காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார். 2008- ம் ஆண்டு, ஆஷுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி பெற்ற 'ஜோதா அக்பர்' திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்ற நிலையில், இந்த சூஃபி பக்திப் பாடலை 'ஜோதா அக்பர் படத்திற்காக' முதலில் இசையமைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்,“நான் அஜ்மீருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த காதிம்களில் ஒருவர், 'நீங்கள் ஏன் குவாஜாவைப் பற்றி ஒரு பாடல் போடக்கூடாது? நீங்கள் இன்னமும் அதைப் பற்றிப் பாடவில்லையே. நீங்கள் 'பியா ஹாஜி அலி' (2000-ல் வெளியான 'பிஸா' திரைப்படப் பாடல்) போட்டிருக்கிறீர்கள்' என்று கேட்டார். நான், 'எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த மெலடி கிடைக்கவில்லை. அது கிடைப்பதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாதா?' என்று கேட்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதன்பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணிக்கும்போது, ஒரு காதல் பாடலுக்கான மெலடியை உருவாக்க முயன்றேன். ஆனால், சரியான மெலடி அமையவில்லை. அதனால் ஒரு சோதனை முயற்சியாக, அதை குவாஜாவுக்கான பாடலாகப் பயன்படுத்த முயற்சிதேன். "நான் முழுப் பாடலையும் பதிவு செய்தேன். இதற்காக முழுப் பாடலையும் எழுதுமாறு காஷிஃபிடம் (பாடலாசிரியர்) கேட்டேன். ஓராண்டுக்குப் பிறகு, ஆஷுதோஷ் கோவாரிகர் என்னிடம் 'ஜோதா அக்பர்' கதையைச் சொன்னார்," என்று ரஹ்மான் என்.டி.டிவிக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
முகலாயப் பேரரசர் அக்பர் (ஹிருத்திக் ரோஷன் நடித்தார்) அஜ்மீரில் உள்ள குவாஜா தர்கா ஷெரீஃபிற்குச் செல்வது போல் கதை அமைந்திருந்தது. அப்போது அது ஒரு சிறிய தர்காவாக இருந்தது என்று ஆஷுதோஷ் கோவாரிகர் விளக்கினார். இதை கேட்டபோது, "அடடா! என்னிடம் ஒரு பாடல் இருக்கிறது! என்று நான் சொன்னேன். ஆனால், அவர், 'எனக்கு ஒரு முழுப் பாடல் வேண்டாம். வெறும் இரண்டு வரிகள் மட்டுமே தேவை,' என்றார். நான், 'ஆனால் இது ஒரு முழுப் பாடல். நான் வேறொன்று இசையமைக்கிறேன்,' என்றேன். அவர், 'வேண்டாம், வேண்டாம், அதைப் போடுங்கள்,' என்று கேட்டார்," என ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுபடுத்தினார்.
கோவாரிகர் முழுப் பாடலைக் கேட்டபின், என் கைகளைப் பிடித்துக்கொண்டு, "தயவுசெய்து இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள்," என்று மீண்டும் மீண்டும் கூறினார். “நான், 'சரி, ஆனால் நீங்கள் எதையும் மாற்றக்கூடாது,' என்று சொன்னேன். அதன்பிறகு இரண்டு ஆண்டுகளில், எனக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன," என்று "குவாஜா மேரே குவாஜா" பாடல் வெளியானதைக் குவாஜாவின் ஆசியாகக் குறிப்பிட்டார். 2009-ஆம் ஆண்டு டேனி பாயில் இயக்கிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்திற்காக ரஹ்மான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "குவாஜா மேரே குவாஜா" மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 'குரு' (2007) திரைப்படத்தில் இடம்பெற்ற "மைய்யா" என்ற ஐட்டம் பாடலும் ஆன்மீகப் பயணம் ஒன்றின் மூலம் கிடைத்ததாம். "நான் ஹஜ் யாத்திரைக்குச் (மக்காவுக்கான வருடாந்திரப் புனிதப் பயணம்) சென்றிருந்தேன். அங்குத் தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தவர்கள், 'மோயா! மோயா!' (அரபு மொழியில் தண்ணீர்) என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். 'ஓ, இது ஒரு பாடலுக்கான ஆரம்ப வரிகள்!' என்று நினைத்தேன்! எப்படியும், 'மைய்யா' பாடலுக்கும் தண்ணீருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ஒலியால் நான் தூண்டப்பட்டேன், அவ்வளவுதான்," என்று ரஹ்மான் வெளிப்படுத்தினார். குல்சார் எழுதிய இந்தப் பாடலில் அபிஷேக் பச்சனும் மல்லிகா ஷெராவத்தும் நடித்திருந்தனர்.
இவை ஆன்மீகத் தொடர்புடன் அமைந்தவை என்றாலும், ரஹ்மான் தூய்மையான பக்தி நோக்கங்களுக்காக உருவான மற்றொரு பாடலைப் பற்றிக் கூறினார். அவருடைய மறைந்த தந்தை, ஒவ்வொரு காலையிலும் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தின் முன் அமர்ந்து இசை அமைப்பாராம். அதனால் ரஹ்மான் எப்போதும் அவருடன் பணியாற்ற விரும்பினார். லதா மங்கேஷ்கர், ஆஷுதோஷ் கோவாரிகரின் 'லகான்' (2001) திரைப்படத்தில் "ஓ பாலன்ஹாரே" மற்றும் மணி ரத்னத்தின் 'தில் சே' (1998) திரைப்படத்தில் "ஜியா ஜலே" போன்ற மறக்க முடியாத பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஆனால், ரஹ்மான் பேராசையின் காரணமாக, மங்கேஷ்கருடன் ஒரு டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய 'ரங் தே பசந்தி' (2006) திரைப்படத்தில் "லூகா சுப்பி" பாடலைத் திணிக்குமாறு இயக்குநரை அவர் சம்மதிக்க வைத்தார். அப்படத்தில், ஆர். மாதவனின் கதாபாத்திரம் இறந்த பிறகு, மறுஉலகில் இருந்து தனது தாயைத் (வஹீதா ரஹ்மான் நடித்தார், இவருக்குப் பின்னணிக் குரல் மங்கேஷ்கர் வழங்கினார்) பார்ப்பது போல் இந்தப் பாடல் அமைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.