‘அருவி’ படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அருவி’. பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்ஸ்வாமி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இருவரும் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தப் படம், வித்தியாசமான கதைக்களம், திரை மொழி ஆகியவற்றால் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
படத்தைப் பார்த்தவர்கள் புகழ்ந்து பேசுவதால், இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற சத்யம் சினிமாஸின் வேறொரு ஸ்கிரீனில் திரையிடப்பட்ட இந்தப் படம், இன்று முதல் மெயின் ஸ்கிரீனில் திரையிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தப் படத்தில் முன்னணி நடிகர் ஒருவரைக் கலாய்த்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அத்துடன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கலாய்த்தும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ‘அருவி’ படம் நன்றாக இருந்தாலும், நிகழ்ச்சியைக் கலாய்த்திருப்பது தனக்கு மன வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். “அருவி – இது அன்பை, மனிதத்தைப் பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் பதிவிட்ட ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
#அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! @thambiprabu89 @DreamWarriorpic
— S.R.Prabhu (@prabhu_sr) December 18, 2017