‘தன்னுடைய கல்யாணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருப்பதாக’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா.
‘தமிழ் சினிமாவின் ப்ளே பாய்’ என்றால், அது ஆர்யா தான். எல்லா நடிகைகளிடமும் சகஜமாகப் பேசுவதால், அவரை அப்படி அழைப்பார்கள். அதுமட்டுமல்ல, யார் கலாய்த்தாலும் கவலைப்படாமல் நடிகைகளிடம் தொடர்ந்து கடலை போடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். சமீபத்தில் கூட அமலா பாலிடம் ட்விட்டரில் மொக்கை வாங்கினார் ஆர்யா.
அனுஷ்கா முதல் தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோயின்களுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டவர் ஆர்யா. ஆனால், தனக்குப் பெண் தேடுவதாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவுக்கா இந்த நிலமை? என சமூக வலைதளங்களில் கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், “போன வாரம் ஜிம்ல நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேசிக்கிட்டு இருந்த விஷயம், வீடியோவா லீக் ஆகிடுச்சு. அது எனக்குத் தெரியாம என் ஃபிரெண்ட்ஸ் விளையாட்டுத்தனமா பண்ண ஒரு விஷயம். ஆனால், அதுல பேசுன எல்லா விஷயங்களும் உண்மைதான். கல்யாணத்துக்காக பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன்.
பொதுவா எல்லாருமே அவங்க லைஃப் பார்ட்னரை, அவங்க வேலை செய்ற இடம், நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மூலம் தேடுவாங்க. இல்லேன்னா மேட்ரிமோனியல் இணையதளங்கள்ல தேடிப்பாங்க. ஆனா, நான் அப்படி இல்லைங்க. எனக்குப் பெரிய டிமாண்ட்ஸோ, கண்டிஷன்ஸோ எதுவும் கிடையாது.
உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா, நான் உங்களுக்கு நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, 7330173301 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. இது ஏமாத்துறதுன்னோ, விளையாட்டுத்தனமா பண்றேன்னோ நினைச்சிக்காதீங்க. இது என்னுடைய லைஃப் மேட்டர். இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க, உங்க அழைப்புக்காக காத்திருக்கேன்” என்று பேசியுள்ளார்.
தற்போது அமீர் இயக்கத்தில் ‘சந்தனத்தேவன்’ படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்தப் படத்தில் அவர் தம்பி சத்யாவும் நடிக்கிறார். ஆர்யாவே தயாரிக்கும் இந்தப் படம், பைனான்ஸ் பிரச்னையால் பாதியிலேயே நிற்கிறது. அடுத்ததாக, சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கிறார்.