முன்னதாக, நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.
நடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இந்நிலையில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடிகை பாவனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த செய்தியை கேள்விபட்டபோது நானும் அதிர்ச்சி அடைந்தேன். நான் இந்த வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதற்கு முன்பும் குறிப்பிட்டது இல்லை. இதை நான் தெளிவுபடுத்துகிறேன். ஊடகங்களுக்கு முன்னால் நின்று பதில் சொல்லக்கூடிய மனநிலையில் நான் இல்லை. அதனால் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி எதிர்பாராத நிகழ்விற்கு ஆளானேன். அதுகுறித்து நான் புகார் அளித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணையின் போக்கு எனக்கு அதிர்ச்சியை தந்தது.” என்று குறிப்பிட்டார்.
மேலும், நடிகர் திலீப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குறிப்பிட்டதாவது, “குறிப்பிட்ட அந்த நடிகருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன். எங்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் நாங்கள் பிரிந்துவிட்டோம். அவர் கைதுக்குப் பின் நான் விசாரித்தபோது அதற்கான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டதாக கூறுகிறார். அப்படி என்றால் உண்மை வெளியே வரட்டும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் உண்மை வெளியே வரட்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது”, என கூறினார்.
மேலும், அந்த சம்பவத்திற்கு பின் தனக்கும் திலீப்பிற்க்ம் ரியல் எஸ்டேட் தொடர்பிருந்ததாக கூறப்படுவதை பாவனா மறுத்தார்.