நடிகர் சித்தார்த் நடித்து வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘அவள்’ திரைப்படத்தின்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய் கிழமை வெளியானது.
நடிகர் சித்தார்த் தமிழில் கடைசியாக கடந்தாண்டு ‘ஜில் ஜங் ஜக்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து, அவருடைய ‘சைத்தான் கி பச்சா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனமான எடாகி எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘அவள்’ திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை மிலிந்த் ராவ் நடிக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இத்திரைப்படம், இந்தியில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ எனவும், தெலுங்கில் ‘குருஹம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நடிகர் சித்தார்த்துக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 2013-ஆம் ஆண்டில் தெலுங்கில் சித்தார்த் நடித்த ‘சம்திங் சம்திங்’ திரைப்படமும், இந்தியில் ‘சாஸ்மே பதூர்’ திரைப்படமுமே அம்மொழிகளில் அவர் நடித்த கடைசி திரைப்படமாகும்.
’அவள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சித்தார்த் செவ்வாய் கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படத்தின் டீஸர் செவ்வாய் கிழமை இரவு நடைபெறவுள்ள ப்ரோ கபடி நிகழ்ச்சியில் வெளியாகும் எனவும் சித்தார்த் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஒரு வீட்டை சுற்றி நிகழும் மர்மங்களே இத்திரைப்படத்தின் மையம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து கணிக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதையடுத்து, நடிகர் ரித்திஷ் தேஷ்முக், நடிகர் ஆர்யா உள்ளிட்ட பலரும் சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.