சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘அவள்’. ஹிந்தியில் ‘த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. தெலுங்கிலும் ‘குர்ஹம்’ என்ற பெயரில் இந்தப் படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. ‘அவள்’ படத்துக்கு க்ரிஷ் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரர் படமான இது, விமர்சகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸைப் பெற்றுள்ளது.
மருத்துவரான சித்தார்த், தன் மனைவி ஆன்ட்ரியாவுடன் வடமாநிலத்தில் வசித்து வருகிறார். அவருக்குப் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாகக் குடிவருகிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்து விடுகிறது. அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன? அதை சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் எப்படி சமாளிக்கின்றனர் என்பது கதை.
பொதுவாக, தமிழில் பேய்ப் படங்கள் என்றாலே காமெடி இல்லாமல் இருக்காது. அதுவும் ராகவா லாரன்ஸ் பேய்ப் படங்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு, பேயின் மீதிருந்த கொஞ்சநஞ்ச பயமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அவரைப் பின்பற்றி எல்லாருமே காமெடி பேய்ப் படமாக எடுத்துவந்த நிலையில், அது இல்லாமல் ஹாலிவுட் பாணியில் அப்படியே ஒரு பேய்ப் படத்தைத் தந்ததற்காக இயக்குநர் மிலிந்த் ராவுக்கும், அவரோடு சேர்ந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதிய சித்தார்த்துக்கும் பாராட்டுகள்.
சித்தார்த் தொடங்கி ஆன்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா என படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே சரியாக, சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பேய் பிடித்த பெண்ணாக நடித்துள்ள அனிஷா, வெவ்வேறு ரியாக்ஷன்களில் மிரள வைக்கிறார். சித்தார்த் - ஆன்ட்ரியா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள், படம் பார்ப்பவர்களை வெட்கப்பட வைக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலம், தொழில்நுட்பக் கலைஞர்கள். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் க்ரிஷும் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். நிறைவேறாத ஆசை, இருட்டு வீடு என பழைய ஃபார்முலாவாக இருந்தாலும், த்ரில்லாக சொல்லிய விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மிலிந்த் ராவ்.