/indian-express-tamil/media/media_files/2025/10/15/avm-2025-10-15-16-42-42.jpg)
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அன்று முதல் இன்று வரை இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான் என்று மக்கள் பேசும் அளவிற்கு தமிழ் சினிமாவில் கோலோச்சியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் இசை இன்றைய தலைமுறையினருக்கும் தாலாட்டு பாடலாக உள்ளது. ‘அன்னக்கிளி’ முதல் ‘விடுதலை’ வரை இளையராஜாவின் இசைப்பயணம் நமக்கு சிலிர்ப்பை உருவாக்குகிறது. இசைக்கு என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இளையராஜா சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்தார். இந்நிலையில், ‘முரட்டுக்காளை’ படத்தில் இளையராஜா மியூசிக் வேண்டாம் என்று சொன்ன காட்சிக்கு எப்படி மியூசிக் வந்தது என்பது குறித்து தயாரிப்பாளர் ஏ.வி.எம் குமரன் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, “முரட்டுக்காளை படத்தில் எனக்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அது என்ன என்றால் இரயிலில் ரஜினிக்கும் வில்லனுக்கு சண்டை நடக்கும் காட்சி. அது படத்தின் மிக முக்கியமான காட்சியாகும். ஒவ்வொரு ரீ ரெக்கார்டிங்கின் போதும் நான் கம்போஸிங் ரூமில் இருந்துவிடுவேன். அங்கு வாசிப்பதை நான் கேட்பேன். அது சரியில்லை என்றால் நான் சொல்வேன் இளையராஜா சரிசெய்துவிடுவார். இந்த சண்டை காட்சி வரும் பொழுது இளையராஜா ஒரு அவசரத்தில் இருந்தார்.
முடித்துவிட்டால் போதும் என்று இருந்தார். அந்த சண்டைக்காட்சி மிகவும் நீளமான சண்டைக் காட்சி. அன்றைக்கு அது ஒரு புதுமையான சண்டைக்காட்சி. அதற்கு மியூசிக் வேண்டாம் வெறும் இரயில் சவுண்ட் மட்டும் போதும் என்று சொன்னார். அப்போது என்ன இளையராஜா இப்படி சொல்லிவிட்டார் என்று நினைத்துக் கொண்டு அந்த படத்தின் எடிட்டர் விட்டல் என்பவரை அழைத்தேன். இளையராஜா இந்த காட்சிக்கு மியூசிக் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், இந்த காட்சிக்கு மியூசிக் வேண்டும் என்பது என் அபிப்ராயம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் நான் மியூசிக் செட் செய்து காமிக்கிறேன் உங்களுக்கு ஓகே என்றால் செட் செய்யலாம் என்றார்.
அதன்பின்னர், அவர் செட் செய்து காண்பித்தார். மிகவும் அருமையாக இருந்தது. இந்த படத்தில் இருப்பது இளையராஜாவின் மியூசிக் தான் ஆனால் அதை அவர் போடவில்லை எடிட்டர் போட்டார். வேறொரு காட்சிக்கு இளையராஜா இசையமைத்த மியூசிக்கை அந்த சண்டை காட்சியில் போடொடொம். இது தெரிந்த பிறகு இளையராஜா எதுவும் சொல்லவில்லை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.