உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியான பாகுபலி ரூ.1000 கோடி வசூலில் அள்ளியுள்ளது. இந்திய திரைப்படம் ஒன்று ரூ.1000 கோடி வசூலை தொடுவது இதுவே முதல் முறை.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி-2 திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு சரியான விருந்து படைத்தது என்றே கூறலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் வெளியானது.
ஆரம்பம் முதலே சாதனை படைத்து வரும் இத்திரைப்படம், வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தியது. அதிக வசூலை குவித்த பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய திரைப்படங்களின் சாதனையை முறியடித்ததோடு, 6 நாட்களில் சுமார் ரூ.750 கோடி வசூலித்து இந்திய திரையுலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சாதனை மேல் சாதனைகளை படைத்து வரும் பாகுபலி-2 தற்போது முதல் முறையாக ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படம் எனற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. திரைப்பட வரலாற்றில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ள முதல் இந்திய திரைப்படம் பாகுபலி-2 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரூ.800 கோடியும், வெளிநாடுகளில் ரூ.200 கோடியும் வசூல் செய்துள்ளது.
பாகுபலியின் முதல் பாகம் ரூ.650 கோடியை வசூல் செய்த நிலையில், பாகுபலி-2 பிரம்மாண்டத்திலும் சரி, வசூலிலும் சரி எளிதாக அதனை மிஞ்சிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் பாகுபலியின் கதாநாயகன் பிரபாஸ் தற்போது உலக அளவில் ஒரு ஸ்டாராக வலம் வருகிறார். இதனிடையே நடிகர் பிரபாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் இயக்குனர் ராஜமௌலி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். என் மீது அன்பு வைத்துள்ள அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் எஸ் எஸ் பாகுபலிக்கு எனது மிகப் பெரிய நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி பல்வேறு நிகழ்சிகளில் பேசும்போது பிரபாஸுக்கு புகழாராம் சூட்டி வருகிறார். இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் பிரபாஸ் தான் என கூறும் அவர், பிரபாஸின் ஊக்கமும், அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியம் இல்லை. மேலும், பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்காக முழுமையாக 5 வருடங்களை கொடுத்துள்ளார். வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று பல்வேறு நேர்காணல்களில் ராஜமௌலி கூறியுள்ளார்.
பாகுபலியின் முதல் பாகம், இரண்டாம் பாகம் என பாகுபலியின் ஒட்டுமொத்த குழுவிற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. ஏனெனில், ஒரு திரைப்படத்திற்காக பல்வேறு கதாப்பாத்திரங்களும் 5 வருடங்களாக நடித்து வந்துள்ளனர். தற்போது அந்த குழுவின் முயற்சி வீண் போகவில்லை என்பதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பே சாட்சியாக அமைந்துள்ளது. இனி வரும் திரைப்படங்கள் எளிதில் முறியடிக்கமுடியாத சாதனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி-2. தரமான படங்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் என்பதை பரைசாற்றும் வகையில் வெற்றிநடை போடுகிறது பாகுபலி-2.