பாலிவுட்டை கலக்கிய பாகுபலி-2 !

பாலிவுட்டில், முதல் ஆறு மாதங்களில், இந்த ஆறு படங்கள் பெற்ற ஒட்டுமொத்த வசூலானது, ரூ.1128 கோடியாகும். பாகுபலி 2 மட்டும் ரூ.510 கோடி வசூல்...

பாலிவுட்டில் 2017-ம் வெளியான திரைப்படங்களில் இதுவரை பாகுபலி-2 தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பிடும்படியாக 2017-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் டாப்-6 படங்கள் பெற்ற வசூலில், கிட்டத்தட்ட 50 சதவீத தொகையை பாகுபலி-2 பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில், உருவான பாகுபலி-யின் முதல் பாகம் மெகா ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, வெளியான பாகுபலி-யின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வசூலை அள்ளியதோடு, இந்திய சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி-2-க்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

பாலிவுட்டில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஷாருக்கானின் ரயீஸ், சல்மான்கானின் டியூப்லைட் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. இந்த படங்கள் வசூலில் சாதனை படைக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், பாலிவுட்டில் அதிக வசூல் அள்ளிய டாப்-6 படங்களின் பட்டியலில் பாகுபலி-2 முதலிடம் பிடித்துள்ளது.

  • பாகுபலி-2 ரூ. 510 கோடி
  • ரயீஸ் ரூ.139 கோடி
  • காபில் ரூ.125 கோடி
  • டியூப்லைட் ரூ.121 கோடி
  • ஜாலி எல்.எல்.பி ரூ.117 கோடி
  • பத்ரிநாத் கி துல்ஹானியா ரூ.116 கோடி

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பாலிவுட்டின் இந்த ஆறு படங்கள் பெற்ற ஒட்டுமொத்த வசூலானது, ரூ.1128 கோடியாகும். இதில், பாகுபலி-2 மட்டும் கிட்டத்தட்ட 50 சதவீத வசூலை அள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தான் கடந்த 2016-ம் ஆண்டின் நிலையும் இருந்தது. குறிப்பிடும் படியாக 2016-ம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில்,(ஜனவரி முதல் ஜூன் வரை) ஜங்கிள் புக் திரைப்படம் தான் முன்னிலையில் இருந்தது. ஹிந்தியில் மட்டும் ஜங்கிள் புக் ரூ.110 கோடி வசூல் செய்தது.

ரயீஸ், டியூப்லைட் ஆகிய திரைப்படங்கள் வசூலில் ரூ.200 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அத்திரைப்படங்களால் அந்த அளவு வசூலை அள்ள முடியாமல் போனது. டியூப்லைட் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது என்றபோதிலும், அந்த திரைப்படம் ரூ.200 கோடியை தாண்டாது என்றே சினிமா ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டும் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படங்களே அதிக வசூலை அள்ளி குவித்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close