ராஜமவுலி - பிரபாஸ் கூட்டணி இவ்வளவு பெரிய சாதனையைப் படைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம்! கடந்த வெள்ளியன்று வெளியான 'பாகுபலி 2' படம் தற்போது வரை உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இமாலய சாதனைப் படைத்துள்ளது. அதுவும் ஹிந்திப் படங்களில் திங்கட்கிழமை அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையையும் உருவாக்கியுள்ளது.
வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலாவின் தகவலின் படி, இந்த நான்கு நாட்களில் பாகுபலி 2 இந்தியாவில் 490 கோடியும், வெளிநாடுகளில் 135 கோடியும் என மொத்தமாக இதுவரை 625 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மட்டும் 37 கோடி வசூல் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாம். முதல் இடத்தில் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸின் 8-ஆம் பாகமும், இரண்டாம் இடத்தில் சல்மா ஹேயக் நடித்த லத்தின் படம் ஒன்றும் உள்ளன.
தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவில் ஓப்பனிங் வாரத்தில் 65.65 கோடியை பாகுபலி 2 கலெக்ட் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு உண்மையையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, பாலிவுட்டில் இதுவரை வெளியான படங்களில் முதல் மூன்று நாள் வசூலில் பாகுபலி முதலிடம் பிடித்துள்ளது என கூறியுள்ளார். அதன்படி சல்மான் கானின் 'சுல்தான்' 105.53 கோடியும், அமீர்கானின் 'தங்கல்' 107.01 கோடியும், பாகுபலி 2 (ஹிந்தி) 128 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவிலேயே அதிகமாக கலெக்ஷனாகிய படம், அமீர்கான் நடித்த 'பிகே' தான். அப்படம் 792 கோடி வசூல் செய்தது. ஆனால், பாகுபலி 2 அப்படத்தின் கலெக்ஷனை மிக விரைவில் தாண்டிவிடும் என கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a75-300x217.jpg)
இந்நிலையில், பேங்காக்கில் உள்ள பிரபல 'மெடேம் டுசாட்ஸ்' அருங்காட்சியத்தில், 'பாகுபலி' பிரபாஸின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் ஒருவருக்கு, இந்த மெழுகு அருங்காட்சியத்தில் சிலை வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.