தமிழக அரசியல் விவாதங்கள் அனைத்தையும் ஓவர்டேக் செய்து, அனைவரையும் இன்று முணுமுணுக்க வைத்திருக்கும் ஒரே சொல் 'பாகுபலி'.. ஐ மீன் பாகுபலி 2. உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒரு திருவிழாவாகவே இது கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ரிலீஸ் ரத்து! ஏன்....?
இப்படி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பாகுபலி 2 படம் குறிப்பிட்ட நேரத்தில், அதாவது தமிழகத்தின் அனைத்து திரையரங்கிலும், இன்று முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நிதிப்பிரச்சனை காரணமாக இப்படத்தின் முதல்நாள் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று காலை 11.30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து திரைப்பட விமர்சகர் லதா ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டரில், "தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் முதல் காட்சி காலை 11.30 மணிக்குத் தொடங்கும். பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. காலை 5 மணி மற்றும் 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், இப்படத்தின் தமிழக வர்த்தகம் பாதிக்காது. அடுத்த வாரத்தில் நிறைய புக்கிங் உண்டாகும்" என பதிவிட்டுள்ளார்.
இதனால், இப்போது வரைக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் பாகுபலி ரசிகர்கள் மட்டுமே படத்தைப் பார்த்துவிட்டு, படம் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில்,சில கருத்துக்களை பார்க்கும் போது, நம்முடைய எதிர்பார்ப்புகளை பாகுபலி 2 பூர்த்தி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சரி... கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் தெரியுமா?
இன்று தமிழகத்தில் முதல் காட்சி ரத்தானவுடன், ரசிகர்கள் 'இங்க படம் ரிலீஸ் ஆகல...உங்கள் ஊர்ல ஆகிடுச்சான்னு தெரியுமா?'-னு கேட்டதை விட, 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் தெரியுமா?...ஏதும் நெட்ல படிச்சியா-னு' கேட்டது கொஞ்சம் அதிகம் தான். உண்மையில், இந்த எதிர்பார்ப்பு நிறைந்த கேள்விக்கான பதிலை, இயக்குனர் ராஜமவுலி மிகவும் திறமையுடன் கையாண்டிருப்பதாக படம் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2017/04/a37.jpg)
இன்னும் சொல்லப்போனால், இப்படத்தில் இரண்டு மிகப்பெரிய மிகப்பெரிய ட்விஸ்ட்கள் வைக்கப்பட்டுள்ளதாம். அதில் ஒன்று கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதாம். ரசிகர்களை திருப்தியடைய வைக்கும் அளவிற்கு இந்த ட்விஸ்ட் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் லீக் ஆன பாகுபலி 2! படக்குழு அதிர்ச்சி!!!
இந்தநிலையில், பாகுபலி 2-ன் முழு படமும் இணையத்தில் நேற்று இரவே வெளியாகிவிட்டதாகவும், இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாகவும் புதிய தலைமுறை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.