சின்னத்திரை தொடராகிறது பாகுபலி!

கட்டப்பா பிறந்து வளர்ந்த கதை. அவர் மகிழ்மதி தேசத்தின் அடிமை தளபதியான கதை. ராஜமாதா சிவகாமி பிறந்தது முதல் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தது வரையிலான கதை....

இந்தியளவில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையைப் படைக்க ‘பாகுபலி 2’ படம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கூடிய சீக்கிரம் அந்த சாதனையை படைத்துவிடும். பாலிவுட்காரர்களை வாய்ப்பளிக்க வைத்திருக்கும் இப்படம், டாப் 3 கான்களுடைய படத்தின் ஓப்பனிங் வசூலை துவம்சம் செய்துவிட்டது. அவர்களும் இதுவரை வாய்திறக்கவே இல்லை.

வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலாவின் தகவலின் படி, நான்கு நாட்களில் பாகுபலி 2 இந்தியாவில் 490 கோடியும், வெளிநாடுகளில் 135 கோடியும் என மொத்தமாக இதுவரை 625 கோடி வசூல் செய்துள்ளது. திங்கட்கிழமை மட்டும் 37 கோடி வசூல் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்தியாவிலேயே அதிகமாக கலெக்ஷனாகிய படம், அமீர்கான் நடித்த ‘பிகே’ தான். அப்படம் 792 கோடி வசூல் செய்தது. ஆனால், பாகுபலி 2 அப்படத்தின் கலெக்ஷனை மிக விரைவில் தாண்டிவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகுபலி கதை சின்னத்திரையில் தொடராக வெளிவர உள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் வரும் கதாபாத்திரங்களின் பின்னணி கதைகள் சின்னத்திரை தொடராகிறது. முக்கியமாக, கட்டப்பா பிறந்து வளர்ந்த கதை. அவர் மகிழ்மதி தேசத்தின் அடிமை தளபதியான கதை. ராஜமாதா சிவகாமி பிறந்தது முதல் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தது வரையிலான கதை. தேவசேனா தனது நாட்டின் இளவரசியானது எப்படி? இப்படி ஒவ்வொரு கேரக்டர்குள்ளும் உள்ள தனித்தனி கதைகள் சின்னத்திரை தொடராக வளர உள்ளது.

இதனால், சின்னத்திரை தொடர்கள் தயாரிக்கும் நோக்கத்தில் பாகுபலிக்காக போடப்பட்ட செட்கள் எதுவும் பிரிக்கப்படவில்லை. இனி அங்கு மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஆனால், பாகுபலி படத்தில் நடித்த யாரும் இதில் நடிக்கப்போவதில்லை. அவர்களை போன்ற சாயலில் உள்ள நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அளித்த பேட்டியில்,

“பாகுபலி கதை இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிட்டது. 3-ஆம் பாகம் எடுக்கும் எண்ணம் துளியும் இல்லை. ஆனாலும், பாகுபலியின் கதைகள் டிவி தொடராகவும், புத்தக கதைகளாகவும் தொடர்ந்து வெளியாகும். ஒவ்வொரு கேரக்டருக்கும் உள்ள பின்புலங்கள் கதைகளாக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடர்களாக தயாரிக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஒளிபரப்புத் தொடங்கும்” என்றார்.

இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையும் ஒரு திரைப்படமாகவே கருதி படமாக்க உள்ளார்கள். பாகுபலி படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இதிலும் பணியாற்ற உள்ளார்கள். பல இயக்குனர்கள் இதனை இயக்குவார்கள் என தெரிகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close