பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மலையாள சினிமா படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்று திரும்பிய நடிகை பாவனா, கேரளாவில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது கார் ஓட்டுனர் மார்டின் அந்தோணி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய பல்சர் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தலின் பின்னணியில் மலையாள நடிகர் திலிப்பும் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி திலீப்பை போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட திலிப்பிடம் நீதிமன்ற அனுமதியுடன் 2 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து, இன்று அவரை அங்கமாலி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் ஒருநாள் விசாரணைக்கு போலீஸார் அனுமதி கேட்டனர். ஆனால் நீதிமன்றம் அங்கேயே அவரிடம் விசாரணை நடத்திக்கொள்ள நேரம் ஒதுக்கி கொடுத்தது.
மாலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட திலீப், தனக்கு ஜாமீன் வழங்கும்படி மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தருணத்தில் திலீப்பை வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
அதை ஏற்று திலீப்பின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் திலீப். மீண்டும் ஜாமீன் கேட்டு மேல் நீதிமன்றத்தை அணுக திலீப்பின் வழக்கறிஞர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.