அடித்து நொறுக்கும் அவெஞ்சர்ஸ் வசூல்... மூன்று நாளில் நாலாயிரம் கோடி

தமிழகத்தைப் பொறுத்தவரை படம் சூறாவளியாக சுழன்றடித்திருக்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்துள்ளது

பாபு

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் திரைப்படம் பல சாதனைகளை படைக்கும், அதிக ஓபனிங்கை பெற்ற ஹாலிவுட் படம் என்ற சாதனையை படைக்கவும் வாய்ப்புள்ளது என சென்ற வாரம் எழுதியிருந்தோம். அது நடந்திருக்கிறது. முதலில் இந்தியாவில் இதன் வசூலைப் பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை படம் சூறாவளியாக சுழன்றடித்திருக்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்த வருட சாதனையான தானா சேர்ந்த கூட்டத்தின் 2.38 கோடி வசூலை முறியடித்துள்ளது.

இந்திய அளவிலும் இந்தப் படம்தான் அடித்து வெளுக்கிறது. இதன் முதல் நான்கு நாள் வசூல்…

முதல்நாள் வெள்ளிக்கிழமை – 31.30 கோடிகள்

இரண்டாம்நாள் சனிக்கிழமை – 30.50 கோடிகள்

மூன்றாம்நாள் ஞாயிற்றுக்கிழமை – 32.50 கோடிகள்

நான்காம்நாள் திங்கள்கிழமை – 20.52 கோடிகள்

மொத்தம் – 114.82 கோடிகள்

யுஎஸ்ஸில் வியாழக்கிழமை நடந்த ப்ரீமியர் காட்சிகளில் சுமார் 39 மில்லியன் டாலர்களை வசூலித்து அதிகபட்ச ப்ரீமியர் காட்சி வசூலில் இந்தப் படம் நான்காவது இடத்தைப் பிடித்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் ஓபனிங் வசூலில் யுஎஸ்ஸில் இதுவரை முதலிடத்தில் இருந்த படம் ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ். 248 மில்லியன் டாலர்களை – அதாவது கிட்டத்தட்ட 1625 கோடிகளை முதல் மூன்று நாள்களில் இப்படம் வசூலித்தது. அதனை இன்ஃபினிட்டி வார் முடிறியடித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் யுஎஸ்ஸில் 257.70 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

அத்துடன் பிற நாடுகளில் ஞாயிறுவரை தோராயமாக 382.82 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மொத்தமாக 640.50 மில்லியன் டாலர்கள். சுமாராக நான்காயிரம் கோடிகளுக்கும் மேல்.

ஆஸ்ட்ரேலியா, இத்தாலி, இந்தியா உள்பட சில நாடுகளில் மட்டுமே இப்படம் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்கள் அதிகம் வசூலிக்கும் ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளில் இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக சீனாவில் வரும் 11 ஆம் தேதியே படம் வெளியாகிறது. சீனாவில் படம் வெளியாகும் போது, படத்தின் வெளிநாடு வசூல் ஒரு பில்லியன் டாலர்களை சாதாரணமாக தாண்டும். அதேபோல் யுஎஸ்ஸில் 900 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்து யுஎஸ் வசூலில் ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அதனை இப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

×Close
×Close