கெட்டவனுடன் இருப்பது போல நடித்து, அவனையே பழிவாங்கும் வழக்கமான கதையை, கொஞ்சம் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘பாகமதி’.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அனுஷ்கா, கணவனாகப்போகும் தன் காதலனை சுட்டுக்கொன்ற வழக்கில் சிறையில் இருக்கிறார். நேர்மையான மத்திய அமைச்சர் என்று கருதப்படும் ஜெயராம் மீது அவதூறு பரப்ப, சில அரசியல்வாதிகள் சிபிஐ உதவியை நாடுகின்றனர். அதை ஏற்றுக்கொண்டு தமிழகம் வருகிறார் சிபிஐ இணை இயக்குநர் ஆஷா சரத்.
மத்திய அமைச்சரான ஜெயராம் மீது நேரடியாக கைவைக்க முடியாது என்பதால், அவரிடம் 10 வருடங்கள் பர்சனல் செகரட்டரியாக இருந்த அனுஷ்கா மீது சிபிஐக்கு கண் விழுகிறது. அவரிடம் விசாரித்து ஜெயராம் மீது பழிபோட நினைக்கின்றனர்.
இதற்காக ஜெயிலில் இருக்கும் அனுஷ்காவை, பேய் பங்களா என்று அழைக்கப்படும் பாகமதி கோட்டைக்கு அழைத்து வருகின்றனர். அந்த கோட்டைக்குள் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்தக் கோட்டைக்குள் உண்மையிலேயே பேய் இருந்ததா? பாகமதி யார்? ஜெயராம் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.
நேர்மையான கலெக்டர், பேய் பிடித்த பெண் என வெரைட்டியாக நடித்து அசத்தியிருக்கிறார் அனுஷ்கா. அதுவும் தன் கையில் தானே ஆணியடித்துக் கொள்கிற இடம், ஆத்தாடி... மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜெயராமின் உண்மையான முகம் தெரிய வரும்போது, இது ஏற்கெனவே தெரிந்த கதை தானே என்ற சலிப்பு ஏற்படுகிறது.
சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷா சரத், ‘பாபநாசம்’ போலவே மிரட்டலான அதிகாரியாக நடித்திருக்கிறார். அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருக்கும் முரளி சர்மாவும் நன்றாக நடித்திருக்கிறார். எஸ்.தமனின் இசையும், ஆர்.மதியின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கின்றன.
பல மர்ம முடிச்சுகளோடு முடியும் முதல் பாதிக்கு, சுவாரசியமான விடைகள் இரண்டாம் பாதியில் கிடைக்கும் என்று பார்த்தால்... யானைக்கு சோளப்பொரியைக் கொடுத்து முடித்துவிட்டார் இயக்குநர் அசோக்.
‘பாகுபலி’க்குப் பிறகு ரிலீஸாகும் படம் என்பதால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறியிருக்கிறது ‘பாகமதி’. இதுபோன்ற கதைகள் ஏற்கெனவே வந்துவிட்டதால், கதையின் போக்கை எளிதாக யூகித்துவிட முடிகிறது. த்ரில்லர் படத்தில் கதையின் போக்கை யூகித்துவிட்டால் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? அந்த அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது ‘பாகமதி’.