போதும்...! இனி தமிழன் தான் தமிழகத்தை ஆளனும் - பாரதிராஜா 'ஆவேசம்'!

இனம் மற்றும் மொழி விஷயத்தில் தமிழர்களுக்கு துரு பிடித்துவிட்டது.

சென்னை மெரினாவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், நான்கு பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இன்று சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, ” தமிழர்களுக்கே ஈழத்தைப் பற்றியும் அங்கு நடந்த இனப் படுகொலை பற்றியும் தெரியாத நிலை உள்ளது. அதைப்பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே, மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நடத்தப்படுகிறது. திருமுருகன் என்ன கொலையாளியா?, எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது?, யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு இருக்கிறது. அதற்காக அவர்மீது குண்டர் சட்டத்தைப் போடுவதா. நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்கு போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றி பொதுத்தளத்திலும் பேசியிருக்கிறேன். அதற்காக என் மேலும் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்யுங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்கு சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். இந்த மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை இல்லை. வேறு எந்த இடத்திலாவது போய் தமிழன் தலைவனாக முடியுமா, அரசியல் செய்ய முடியுமா அல்லது ஆட்சியில் தான் உட்கார முடியுமா. மற்ற மாநிலத்தவர்களை அரவணைப்போம். அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது. இனம் மற்றும் மொழி விஷயத்தில் தமிழர்களுக்கு துரு பிடித்துவிட்டது.

மடியில் கனம் இருப்பதால் மத்திய அரசுக்கு பயந்து இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு. கலைஞர்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால், எங்களுக்கு பயமில்லை. ரோஷம், மானம் இருந்தால் தமிழக அரசு நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று கடுமையாக கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close