தெலுங்கு "பிக்பாஸ்" போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ?

இதில் போட்டியாளர்கள் யாரென்று பார்ப்போம். தமிழில் யாரைப் போன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கற்பனை கலந்து கொஞ்சம் ஆராய்வோம்.

தமிழில் ஆரம்பிக்கப்பட்ட “பிக்பாஸ்” நிகழ்ச்சி, தினம் ஒரு சர்ச்சைகளுடன் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. என்னதான் மீம்ஸ், ட்ரால் என்று வறுத்து எடுத்தாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட தமிழைப் போலவே… இல்லை இல்லை… தமிழை விட அதிக எதிர்ப்பை பெற்று கடந்த ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது தெலுங்கு பிக்பாஸ். ஆனால், எதிர்ப்பின் காரணமாக சில மாற்றங்களை அங்கு செய்துள்ளனர்.

100 நாட்கள் இப்போது 70 நாட்களாகவும், 15 பிரபலங்கள் 14-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் 30 கேமராக்கள் என்றால், தெலுங்கில் 60 கேமராக்கள்… டாப் ஆங்கிள், லோ ஆங்கிள், ஃப்ரெண்ட் மற்றும் பேக் என, 360 டிகிரியிலும் அனைத்தையும் ஷூட்செய்யப் போகிறார்களாம். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ், ஸ்டார் மா டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதில் போட்டியாளர்கள் யாரென்று பார்ப்போம். தமிழில் யாரைப் போன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கற்பனை கலந்து கொஞ்சம் ஆராய்வோம்.

சமீர்: (வையாபுரி)
தெலுங்கில் இவர் இல்லாத படங்களே இல்லை எனலாம். குணச்சித்திரம், ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடுபவர் இவர்.

கல்பனா ராகவேந்தர்: (ஆர்த்தி)
பிரபல பின்னணிப் பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை. இவர் ஐந்து வயதிலேயே பாட ஆரம்பித்து இப்போது வரை தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 1,500 பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் ‘என் ராசாவின் மனசிலே, தாஜ்மகால், நரசிம்மா’ உள்பட பல படங்களில் பாடியுள்ளார்.

சிவ பாலாஜி: (ஷக்தி)
தெலுங்கின் முக்கியமான நடிகர். சத்யராஜ் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதே படத்தில் ஹீரோயின் நமீதாவின் தங்கையாக நடித்த மதுமிதா தான் உண்மையில் இவரது மனைவி. நமீதா தற்போது தமிழ் பிக்பாஸில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் கத்தி: (சினேகன்)
இயக்குநர், நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் என பன்முகத் திறமைகளைக்கொண்டவர். ஆஸ்கர் நூலகத்தில் நிரந்தர மைய சேகரிப்பில் வைக்கப்பட்டிருக்கும் முதல் தெலுங்கு ஸ்க்ரிப்ட் இவருடையது தான். தெலுங்கு `10 டிவி’யில் ஒளிபரப்பப்படும் இவருடைய விமர்சனங்கள், அதிக சர்ச்சைகளைக் கிளப்பிவிடும் அளவுக்கு டாப் லெவல் ரிவ்யூ ரைட்டர்.

தன்ராஜ்: (கஞ்சா கருப்பு)
தெலுங்கில் ஹீரோ மற்றும் காமெடியனாக சுமார் 43 படங்களில் நடித்திருக்கார். ஈ டிவி-யில் தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர், இப்போது டாப் – 15 தெலுங்குப் பிரபலங்களில் ஒருவர். இவருடைய படம் “பிள்ள ஜமீன்தார்” காமெடியில் சக்கப் போடு போட்டது.

அர்ச்சனா:
கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 38 ஹிட் படங்களில் வித்தியாசமான பல ரோல்களில் நடித்தவர் இவர். தெலுங்கு நடிகைகளில் அர்ச்சனாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஹோம்லி முதல் கிளாமர் வரை பக்கா நடிகை. குச்சுப்புடி, பரதநாட்டியம் போன்ற பல டான்ஸ் வித்தைகள் தெரிந்தவர். இவரின் சமீபத்திய டாப்லெஸ் புகைப்படங்கள் செமயாக வைரல் ஆனது.

சம்பூர்ணேஷ் பாபு:
இவரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தெர்மாகோலில் இதயம் செய்து கேர்ள் ஃப்ரெண்டின் உயிரைக் காப்பாற்றிய மரண மாஸ் ஹிட் காமெடிக்குச் சொந்தக்காரர். தமிழில் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனைப் போல தன்னையே கலாய்த்து காமெடி செய்பவர். அதில் வெற்றியும் கண்டவர். பிக்பாஸில் இவரது வருகை தெலுகு ரசிகர்களுக்கு ஜாலி ஃபீலிங் தான்.

மது ப்ரியா: (ஜூலி)
தெலுங்கு நாட்டுப்புறப் பாடல்களுக்குப் பேர்போன பாடகி மது ப்ரியா. பெரிதாக லைம் லைட் இல்லை என்றாலும், `பிக் பாஸ்’ மூலம் இவருக்குப் பல வாய்ப்புகள் வரலாம்..

தேஜஸ்வி மடிவாடா: (காயத்ரி)
தமிழில் ‘நட்பதிகாரம் 79’ படத்தின் மூலம் அறிமுகமானவர். 2013-ம் ஆண்டில் டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தெலுங்கில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

ஜோதி: (ஓவியா)
ஜோதி கொஞ்சம் கிளாமர் தூக்கலான தெலுங்கு சீரியல் நடிகை. படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஹரிதேஜா:
இவரும் ஜோதியைப் போல தெலுங்கு சீரியல் நடிகை தான்.

பிரின்ஸ்: (ஆரவ்)
இதுவரை ஒன்பது தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வாய்ப்பு தன்னை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு போய்சேர்க்கும் என அதிகம் நம்பியிருக்கிறார்.

கத்தி கார்த்திகா: (ரைஸா)
சேனல் V6-ல் பிரைம் டைம் தொகுப்பாளராகவும், சோஷியல் மீடியாக்களில் பரபரப்பாக இயங்குபவராகவும், மாடலிங்கில் புகழ்பெற்ற `கேட் வாக் குயின்’னாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் கார்த்திகா.

முமைத் கான்: (நமீதா)
‘என் பேரு மீனாக்குமாரி’ ‘டாடி மம்மி’ போன்ற பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கவர்ச்சி குயின். பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் அனைத்திலும் கலக்கிவரும் டான்ஸர்.

 

×Close
×Close